சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.190   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்

-
ஏயு மாறுபல் உயிர்களுக் கெல்லையில் கருணைத்
தாய னாள்தனி யாயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத்
தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு.

[ 1]


பல உயிர்களுக்கும் எல்லையற்ற கருணையைப் பொருந்துமாறு செய்தருளும் தாயை ஒப்பவரான உமையம்மையார், ஒப்பற்ற தம் தலைவரைத் தழுவிக் கொள்வதற்காக, இறைவரின் தனித்தன்மையினை ஆய்ந்து கொண்டிருக்கும் நான்மறைகளும் போற்ற, அரிய தவத்தைச் செய்திடற்கு, தூய பெரும்தவத்தைச் செய்தது தொண்டை நன்னாடு என்பதாகும்.
*** ஏயுமாறு - பொருந்துமாறு.

நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ்பெருந் தொண்டைநன் னாடு.

[ 2]


உலகில் நன்மை விளைதற்கு ஏதுவாக, நீடித்த நடுவுநிலைமையான ஒழுக்கத்தில் தலைநின்று வாழும் தன்மை பொருந்திய தலைமை சான்ற பெருங்குடிகள் தழைத்து வாழ்வுபெற, வலிய பெரிய மதில்கள் சூழும் வளம் கொண்ட நகரங்கள் பலவும் விளங்கிடப் பெற்றதாய், எல்லை காண்பரிய பழம் பெருமையால் திகழ்ந்து வருவது பெரிய தொண்டைநாடு ஆகும்.

குறிப்புரை:

நற்றி றம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவைவந்
துற்ற போதுதம் முயிரையும் வணிகனுக் கொருகால்
சொற்ற மெய்ம்மையுந் தூக்கிஅச் சொல்லையே காககப்
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு.

[ 3]


நற்செயல்களையே தம் வாழ்வில் செய்து வரும் பழையனூரில் வாழ்ந்த வேளாண் மக்கள், தம்மேல் ஒரு குற்றம் வந்து சூழ்ந்த போது, தம் உயிரையும், ஒரு வணிகனுக்கு ஒருகால் தாம் கொடுத்த வாய்மையையும் சீர்தூக்கிப் பார்த்து, தாம் சொன்ன வாய்மையையே உயிரினும் சிறந்ததாய்க் காக்கப் பெற்ற மேன்மை சிறந்தது அத்தொண்டை நாடு ஆகும்.

குறிப்புரை: பரத்தை வயப்பட்ட வணிகன் ஒருவன் தன்னைத் திருத்த முயன்ற தன்மனைவியைத் தனிவழிப் படுத்திக் கொன்று விட்டனன். அத்தீயசெயலால் அவள், நீலி என்னும் பேயாக, மறுபிறவியில் அவனை அலைத்து வந்தாள். அதனின்றும் தப்ப, மந்திர வலியுடைய வாளைக் கொண்டு தன்னைத்தான் காத்து வந்தான். அவ்வணிகன் தொண்டை நாட்டிலுள்ள பழையனூருக்கு வந்தான். அதுகாறும் அவனை அலைத்து வந்த பேயும், ஒரு பெண்வடிவம் கொண்டு, கள்ளிக்கொம்பு ஒன்றைக் குழந்தை வடிவாக்கி, அதனையும் தூக்கிக் கொண்டு, அவ்வணிகனைப் பின் தொடர்ந்து வந்தாள். அஞ்சிய அவ்வணிகன் வேளாளர் பெருமக்கள் எழுபது பேர் கொண்ட அவ்வூரவையாரிடத்துத் தன்னைக் காக்க வேண்டி, விண்ணப்பித்துக் கொண்டான். உடன் வந்த நீலி, இவன் 'என் கணவன்' என்றும், 'இக்குழந்தையும் எங்கள் குழந்தை' என்றும் கூறி, பரத்தை வயப்பட்ட இவன் எங்களை வெறுத்துக் கைவிட்டு வந்தான், அவையோராகிய தாங்கள் 'எங்களை ஒன்று படுத்தி மனையறம்படுத்த வேண்டும்' என விண்ணப்பித்துக் கொண்டனள். வணிகன், 'அவள் கூற்று உண்மை யன்று' என்ன, நீலி தன் இடுப்பில் இருந்த குழந்தையைக் கீழே விடுக்க, அக்குழந்தையும் அவ் வணிகனை 'அப்பா' என்று அழைத்து அவனி டம் செல்ல, அதுகண்ட அவையோர், 'இவ் வழக்கை நாளை தீர்ப் போம், இன்றிரவு இவ் விடத்தில் நீங்கள் ஒருங்கு இருங்கள்' என்று கூற, நீலி 'இவன் கையிலிருக்கும் வாளைக் கொண்டு இன்றிரவு எங்களைக் கொன்றுவிடவும் கூடும்; ஆதலின் அதனை அவன் கையி னின்றும் வாங்கிவிடுக' என்று அவையோரிடத்துக் கூற, வணிகன், 'இவ்வாள் இன்றேல் பேயாக வந்த இவள் என்னைக் கொன்று விடு வாள்' என்று கூற அவையோரும், 'வாளை விடுத்து இவளுடன் தங் குக; உன் உயிர்க்குக் கேடுவரின் எங்கள் எழுபது பேர் உயிரையும், அதற்கு ஈடாகத் தருவோம்' என உறுதி மொழி தந்து ஒருப்படுத்தினர். அவர்கள் ஒருங்கு தங்கிய அவ்விரவில், நீலியாக வந்த பேய், அவ னைக் கொன்று தன் பழியைத் தீர்த்துக் கொண்டது. மறுநாள் காலை அதை அறிந்த அவையோர், தாம் அவ்வணிகனுக்கு முன் கொடுத்த உறுதி மொழிப்படி, தீ வளர்த்துத் தங்கள் எழுபது பேரின் உயிர் களையும் போக்கிக் கொண்டனர். இதுவே இப் பாடற்கண் குறிக்கப் பட்ட வரலாறாகும். அவையோர் தீக்குளித்த இடம், நீலிகுளம் என இன்றும் வழங்குகிறது. அதன் கரையில் அவையோர் எழுபதின்மரின் திருவுருவங்களும், நீலியின் உருவமும் உள்ளன.

ஆணை யாமென நீறுகண் டடிச்சேரன் என்னும்
சேணு லாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டு
வாணி லாவுபூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை
பேண நீடிய முறையது பெருந்தொண்டை நாடு.

[ 4]


சிவபெருமானின் அருள் வடிவமே திருநீறாகும் எனக் கருதி வழிபட்டு வரும் நாளில், உவர் மண் பட்ட உடலுடன் வந்த ஒரு வண்ணானைக் கண்டு, அம்மண் திருநீற்றின் நிறத்தோடு ஒன்று பட்டிருந்தமையின், அவ்வண்ணானை அடியவர் என்று கருதி வணங்க, அவனும் 'அடி வண்ணான்' என, நாயனாரும் 'அடிச் சேரன்' என வணங்க, இவ்வரலாறு வானுலகமெலாம் நிலவ ஆண்ட சேர அரசரின் திருவுடைய மலை நாட்டில் வாழும் ஒளி நிரம்பிய அணிகளை அணிந்த வீரர்களுக்குப் பெண் கொடுத்து, மைத்துனர் முறை கொண்டாடற்கு நீண்ட மரபுடையது அப்பெருந்தொண்டை நாடு ஆகும்.

குறிப்புரை: சேரனார் - சேரமான் பெருமாள் நாயனார். திருநீறே பொருளெனப் போற்றிவந்த இந்நாயனார், உவர்மண் பட்ட உடலுடன் வந்த ஒரு வண்ணானைக் கண்டு, அம்மண் திருநீற்றின் நிறத்தொடு ஒன்று பட்டிருந்தமையின், அவ்வண்ணானை அடியவர் என்று கருதி வணங்க, அவரும் நான் 'அடி வண்ணான்' என்ன, நாயனாரும் 'அடிச் சேரன்' என்றுகூறி, 'திருநீற்றின் வாரவேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும்' என்றருளினர். இவ்வரலாறு, கழறிற்றறிவார் புராணத்தால் அறியலாகும். ஒரு காலத்தில் சேர நாட்டில் ஏற்பட்ட பூசல் காரணமாக, அங்குள்ளோர் பலரும் சிதறிஓட, அவர்களுள் ஒருவணிகப் பெண் தொண்டை நாட்டில் வேளாளர் மனையில் அடைக்கலம் புக, அவர்களும் அப்பெண்ணைத் தம் மகள் என வளர்த்து வந்தனர். பூசல் அடங்கியபின், அப்பெண்ணிற்குரிய பெற்றோர்கள் தேடிவர, அவ் வேளாளரும் தம் மகள் என வளர்த்து வந்த தன்மையால், மகட் கொடை நிரம்ப வழங்கி மணஞ்செய்வித்து அனுப்பினர். இதனால் சேர நாட்டினர் தொண்டை நாட்டினர்க்கு மைத்துனர் முறைமை யாயினர், இவ்வரலாறே இங்குக் குறிக்கப்படுவதாகும். இனிக் காஞ்சியைக் காடு கெடுத்து நாடாக்கிய கரிகாலன், தானும் தன் வழி யினரும் சேரர் குலப் பெண்களை மணஞ்செய்து வாழ்ந்தமை பற்றிச் சேரர் மைத்துனர் முறைமையாயினர் என்ற வரலாறும் கூறப்படுகிறது.

கறைவி ளங்கிய கண்டர்பால் காதல்செய்ம் முறைமை
நிறைபு ரிந்திட நேரிழை அறம்புரிந் ததனால்
பிறையு ரிஞ்செயிற் பதிபயில் பெருந்தொண்டை நாடு
முறைமை யாமென உலகினில் மிகுமொழி உடைத்தால்.


[ 5]


கருமை பொருந்திய கழுத்தையுடைய பெருமான் பால் தான் அன்பினால் செய்திடும் வழிபாட்டினை நிறை வாக்க விரும்பிய உமையம்மையார் ஒப்பில்லாத நல் அறம்புரிந்த அத்தன் மையால், பிறை உலாவிய உயர்ந்த மதில் சூழும் காஞ்சியம்பதியைத் தன்னகத்துக் கொண்டு விளங்கும் தொண்டை நாடு, உலகில் சிவ நெறிச்சார்பால் மிகுபுகழ் பெற்றிருக்கும் முறைமை யுடையது.
குறிப்புரை:

Go to top
தாவில் செம்மணி அருவியா றிழிவன சாரல்
பூவில் வண்டினம் புதுநற வருந்துவ புறவம்
வாவி நீள்கயல் வரம்பிற உகைப்பன மருதம்
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.

[ 6]


மலைச் சாரல் எனும் குறிஞ்சி இடங்களில், உள்ள குறைவிலாத செந்நிற மணிகள், அங்குள்ள அருவிகளிலும், ஆறுகளி லும் வழிந்தோடுவன. அங்குள்ள முல்லை நிலங்களின் செழிப்பு மிகுதியால் மலர்ந்துள்ள பூக்களில் வண்டினங்கள், என்றும் புதுத்தேன் உண்பன. மருத நிலத்தில் உள்ள குளங்களில் கயல் மீன்கள், வயல் களின் வரம்புகள் உடைந்திடப் பாய்வன, கடற்கரையோரப் பகுதியாய நெய்தல் நிலங்களிலுள்ள பரத்தியர்கள், முத்துக்களை நீரில் கழுவி உலர்த்துவதற்கு இடனாயுள்ளன.
*** தாஇல் - குற்றமற்ற.

குறவர் பன்மணி அரித்திதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன்நிரை மானுடன் பயில்வன கானம்
பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனஞ்
சுறவ முள்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்.

[ 7]


குறிஞ்சி நிலங்கள், வேடர்கள் பல மணிகளையும் அரித்து எடுத்துப் போக்கிக், காராமணிப் பயற்றினை விதைப்பதற்கு ஏற்ப அமைந்துள்ளன. முல்லை நிலங்கள், பால் கறக்கும் பசுக்களின் நிரைகள் மான்களுடன் பயில்வனவாகவுள்ளன. மருத நிலங்கள், பறவைகள் தாமரை மலரில் இருந்து கொண்டு இறால் மீன்களை உண்ணுதற்கிடனாக அமைந்துள்ளன. நெய்தல் நிலங்கள், சுறாமீன் களின் கொம்பு போலும் முட்களை அரிந்து தெய்வமெனக் கொண்டு விழா எடுக்கும் இடங்களாக அமைந்துள்ளன.

குறிப்புரை: நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலை வளந்தப்பின் அம் மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக் கோடு நட்டுப் பரவுக் கடன் கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார் எனவரும் நச்சினார்க்கினியர் உரையும் காண்க. 'சினைச் சுறவின் கோடு நட்டு மனைச் சேர்த்திய வல்லணங்கினான்' (பட்டினப்பாலை, வரி 86,87).

கொண்டல் வானத்தின் மணிசொரி வனகுல வரைப்பால்
தண்டு ணர்க்கொன்றை பொன்சொரி வனதள வயற்பால்
வண்டல் முத்தநீர் மண்டுகால் சொரிவன வயற்பால்
கண்டல் முன்துறைக் கரிசொரி வனகலங் கடற்பால்.

[ 8]


மலையிடங்களில், மேகங்கள் வானத்தினின்றும் மணிகளை மழையுடன் சொரிவன. முல்லை நிலத்தின் அயலிடங்களில், நீண்ட தண்டின் கணுக்களில் மலரும் கொன்றைகள் பொன் சொரிவன. வயலிடங்களில் சேற்று நீருடன் புகும் வாய்க்கால்கள், முத்துக்களைச் சொரிவன. தாழை மரங்களை முன்னாகக் கொண்ட கடற்கரைத் துறை முகங்களில், கப்பல்கள் யானைகளைக் கொண்டுவந்து சொரிவன.

குறிப்புரை: குலவரை - நீண்ட பெருமலைகள். தளவு - முல்லை. கண்டல் - தாழை. வண்டல் - உரம் கலந்த சேறு.

தேனி றைந்தசெந் தினையிடி தருமலைச் சீறூர்
பானி றைந்தபுற் பதத்தன முல்லைநீள் பாடி
தூநெ லன்னம்நெய் கன்னலின் கனியதண் டுறையூர்
மீனி றைந்தபே ருணவின வேலைவைப் பிடங்கள்.

[ 9]


குறிஞ்சி நிலத்திலுள்ள சீறூர்கள் தேன் நிறையக் கலந்த செந்தினை மாவைத் தருவன. முல்லை நிலத்திலுள்ள பாடிகள், பால் நிறைந்த வரகுச்சோற்றைத் தருவன. மருத நிலத்திலுள்ள குளிர்ந்த நீர் நிறைந்துள்ள ஊர்கள், தூய செந்நெலின் அமுது, நெய், கரும்பின் கட்டி, பழம், ஆகியவற்றைத் தருவன, நெய்தல் நிலத்திலுள்ள பாக்கங் கள், மீன் நிறைந்த பேருணவைத் தருவன. ஒவ்வொரு நிலத்திலும் அவ்வவ்நிலத்துக்குரிய உணவுப்பொருள்களைச் சேமித்து வைக்கும் களஞ்சியங்கள் இருந்தன.
குறிப்புரை: புற்பதம் - வரகு. வைப்பிடங்கள் - பொருள் சேமித்து வைக்கும் இடங்கள். நானிலங்களில் வாழும் மக்களின் உணவுப் பொருள்கள் இவையெனவும் அவற்றை அங்கங்கே பொதுவான வைப்பிடங்களில் சேமித்து வைத்ததையும் இதனால் அறியலாம்.

குழல்செய் வண்டினங் குறிஞ்சியாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார்கொள முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென்கிளி மருதமர் சேக்கைய மருதம்
நிழல்செய் கைதைசூழ் நெய்தலங் கழியன நெய்தல்.

[ 10]


குறிஞ்சி நிலத்தில் குழல் என ஒலிக்கின்ற வண்டி னங்கள், குறிஞ்சிப் பண்களைப் பாடுவன. முல்லை நிலத்தில் முழவப் பறைகள் மேகம் என முழங்க, முல்லை மலர்களை அரும்புவன. மருத நிலத்தில், மழலைச் சொற் பயிலும் மிருதுவான கிளி மருத மரங்களைத் தமக்குத் துயிலிடமாகக் கொள்வன. நெய்தல் நிலத்தில் உள்ள கழிகள், நிழல் செய்யும்படி உயர்ந்து செழித்து வளர்ந்த தாழைகள் சூழ்ந்து நெய்தல் மலர்களையுடையன.

குறிப்புரை: நானிலங்களுக்குரிய மலர்களும், குறிஞ்சி, மருதத்திற் குரிய பறவைகளும் இப்பாடலால் அறியக் கிடக்கின்றன.

Go to top
மல்கும் அப்பெரு நிலங்களில் வரைபுணர் குறிஞ்சி
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல்முன் விளைக்கும்
பல்பெ ரும்புனம் பயில்வன படர்சிறைத் தோகை
சொல்லும் அப்புனங் காப்பவுஞ் சுரிகுழல் தோகை.

[ 11]


வளம் சிறந்து விளங்கும் அந்நால் வகைப் பெரு நிலங்களிலும், மலையைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தின் எல்லை எங்கணும், வேடர்கள் முன்னாகத் தினையை விதைப்ப, அவை பெருக்கமாக வளர்ந்தோங்கிய புனங்களில், படரும் சிறகுடைய தோகை மயில்கள் தங்கியிருப்பன. சொல்லப்பெறும் அப்புனங்களைக் காத்தற்கெனப் பரண் மீது இருப்பவர்களும், அழகால் நிறைந்து நெளிந்த கூந்தலையுடைய வேடப் பெண்கள் ஆவர்.
குறிப்புரை: இறவுளர் - குறிஞ்சி நிலத்திற்குரிய மக்கட்பெயர். தோகை என வருவனவற்றுள் முன்னையது மயிலையும், பின்னையது பெண்களையும் குறிக்கும். இவ்வேறுபாடு அறிய அவ்விரண்டிற்கும் கொடுக்கப் பெற்றிருக்கும் அடைமொழிகள் அருமை உடையனவாம்.

அங்கண் வான்மிசை அரம்பையர் கருங்குழற் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல்மூழ்கிப் போகாச்
செங்கண் மால்விடை யார்திருக் காளத்தி யென்னும்
மங்குல் சூழ்வரை நிலவிய வாழ்வினால் மல்கும்.

[ 12]


அழகிய இடம் அகன்ற வானுலகில் வாழும் தேவ மகளிரின் கூந்தலில் தங்கிய வண்டுகள், ஒளி பொங்கும் அணிகளை யணிந்த மார்பகங்களையுடைய குறப் பெண்களின் கூந்தலில் மூழ்கி, அவை அவ்விடத்தினின்று மீண்டு போகாது இருந்திடுதற்கு இடனாய, சிவந்த கண்களையுடைய பெரிய ஆனேற்றை ஊர்தியாக உடைய பெருமானின் திருக்காளத்தி என்னும் மேகம் சூழும் திருமலை நிலை பெற்றிருக்கும் பெருவாழ்வால், அக்குறிஞ்சி நிலம் மேம்பட்டிருக்கும்.
குறிப்புரை:

பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து
மாறில் வேடரும் மாதரு மாகவே வணங்கும்
ஆறு சூழ்சடை அண்ணலார் திருவிடைச் சுரமுங்
கூறு மேன்மையின் மிக்கதந் நாட்டுவண் குறிஞ்சி.

[ 13]


அந்நாட்டில் உள்ள வளமை மிக்க குறிஞ்சி நிலமானது, சிறப்பாய நற்பேறு பெற்ற தேவர்களும், தேவ மகளிர் களும், ஒப்பற்ற வேடர்களும், வேடப் பெண்களுமாக வந்து பிறந்து வணங்கிடும், ஆறு சூழ்ந்த சடையையுடைய அண்ணலார் எழுந் தருளியிருக்கும் திருவிடைச்சுரம் என்னும் திருப்பதியும், பெருஞ் சிறப்புடன் நிலவி விளங்கும் சிறப்புடையதாகும்.
குறிப்புரை: திருவிடைச்சுரம் - தொண்டைநாட்டிலுள்ள திருப்பதி களுள் ஒன்று. மலைகளின் இடையில் கற்சுரத்தின் இடையில் உள்ள மையின் இப்பெயர் பெற்றது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை.

அம்பொன் வார்குழல் கொடிச்சியர் உடன்அர மகளிர்
வம்பு லாமலர்ச் சுனைபடிந் தாடுநீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திருக்கழுக் குன்றமும் உடைத்தால்
கொம்பர் வண்டுசூழ் குறிஞ்சிசெய் தவங்குறை யுளதோ.

[ 14]


அழகிய பொன்போலும் சிறப்புடைத்தாய மலர் களையணிந்த நீண்ட கூந்தலையுடைய வேட்டுவப் பெண்களுடன், தேவப் பெண்களும் நறுமணம் உலவிடும் நீர்ச்சுனைகளில் படிந்து நீராடுகின்ற நீண்ட மலைப்பக்கங்களையுடைய, தேவர்களின் தலை வரான சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கழுக்குன்றம் என்னும் திருப்பதியும், அக்குறிஞ்சி நிலத்தில் உள்ளது என்றால், பூ மரக் கொம்பர்களில் வண்டுகள் சூழும் சோலைகள் நிலவிய குறிஞ்சி நிலம் செய்தவப்பேறு குறைவாமோ?அன்று என்பதாம்.
குறிப்புரை: திருக்கழுக்குன்றம் - கழுகுகள் முறையே நான்கு யுகங்களிலும் வந்து வழிபடும் சிறப்பால் இப்பெயர் பெற்றது. தொண்டை நாட்டுத் திருப்பதிகங்களுள் 28ஆவது திருப்பதியாகும்.

கோல முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்கள்
நீல வாட்படை நீலிகோட் டங்களும் நிரந்து
கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப்
பாலை யுஞ்சொல லாவன உளபரல் முரம்பு.

[ 15]


அழகு மிகுந்த முல்லை நிலத்தையும், குறிஞ்சி நிலத்தையும் அடுத்த சில இடங்கள், நீல நிறத்தளாய் வாட்படை ஏந்திய கையையுடைய கொற்றவையின் கோயில்கள் பல நிறையப் பெற்று, வேனிற்காலத்துக் கடும்பகல் பொழுதினைப் பற்றி நிற்கும் பாலை என்று சொல்லும்படியாக அப்பதிகள் இருப்பன.

குறிப்புரை: 'முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப், பாலை என்பதோர் படிவங் கொள்ளும்' (சிலப்ப. மதுரைக். காடுகாண். 64-65) எனச் சிலப்பதிகாரம் கூறுவதற்கிணங்க, 'முல்லையும், குறிஞ்சியும், அடுத்த சில இடங்கள்' என்றார்.
நீலி - கொற்றவை. பண்டைச் சான்றோர் நிலம் பகுத்து ஓதுங் கால் பாலையைத் தனித் தன்மை வாய்ந்ததாகக் கொண்டிலர். நால் வகை நிலங்களும் ஆகாது, அவற்றின் வேறும் ஆகாது நடுநிகர்த்ததாய் நிற்றல் பற்றி இதனைத் தொல்காப்பியர் நடுவு நிலைத்திணை என்றார். 'நடுவு நிலைத்திணையே நண்பகல் வேனிலொடு, முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே'' (தொல். பொருள். அகத். 955) என்ப வாகலின், 'காலவேனிலில் மிகும் பகற் பொழுதினைப் பற்றிய பாலை யும்' என்றார் ஆசிரியரும்.

Go to top
சொல்லும் எல்லையின் புறத்தன
துணர்ச்சுரும் பலைக்கும்
பல்பெ ரும்புனல் கானியா
றிடையிடை பரந்து
கொல்லை மெல்லிணர்க் குருந்தின்மேல்
படர்ந்தபூம் பந்தர்
முல்லை மென்புதல் முயலுகைத்
தடங்குநீள் முல்லை.

[ 16]


பூங்கொத்துக்களில் உள்ள வண்டுகளை அலைத் துக் கொண்டு வரும் காட்டாறுகள், இடைஇடையே ஓடிப் பரந்து, புனக்கொல்லையின் மெல்லிய தண்டுகளுடன் இலைகள் மலிந்த குருந்த மரமேற் படர்ந்த பூம்பந்தர் போல் பரந்திருக்கும் முல்லைக் கொடிகளின் மெல்லிய புதரில் மறைந்திருக்கும் முயல்களை, உகைத்துப் பின் அடங்குதற்கு இடனான முல்லை நிலங்கள், மேற் சொல்லிய எல்லையின் புறத்தே உள்ளன.

குறிப்புரை: சொல்லும் எல்லையில் - சான்றோர் கூறிய நானில வரைப்பின்படி குறிஞ்சியை அடுத்து முல்லை உள்ளது. அவ்வெல்லை யில் காட்டாறுகள் பல பரந்து ஓடி, முயல்களை உகைத்துப்பின் அடங்கி நிற்கும் என இயைக்க.

பிளவு கொண்டதண் மதிநுதற் பேதையர் எயிற்றைக்
களவு கொண்டது தளவெனக் களவலர் தூற்றும்
அளவு கண்டவர் குழல்நிறங் கனியும்அக் களவைத்
தளவு கண்டெதிர் சிரிப்பன தமக்குமுண் டென்று.

[ 17]


பிளவுபட்ட குளிர்ந்த பிறை மதியைப் போன்ற நெற்றியினையுடைய அழகிய இடைச்சியர்தம் பற்களின் அழகை, முல்லை அரும்புகள் களவு கொண்டன என்று, களாச் செடிகள் தம் பூக்களைக் கொண்டு அலர் தூற்றுவன. அவ்வியல்பினை அறிந்த அம் முல்லைகள், அவ் இடைச்சியரின் கூந்தலின் கருமையைத் தம் பழத் தால் களவு கொண்டன என்று அக் களாச் செடியினைப் பார்த்து, 'எம் தன்மை உமக்கும் உண்டு' என்று சிரிப்பன.

குறிப்புரை: முல்லை மலர்கள் இடைச்சியரின் பற்களைக் களவாடின என்று களாச் செடிகள் அலர்தூற்ற, களாச் செடிகள் அவ் இடைச்சிய ரின் கூந்தல் நிறத்தைக் களவாடின என்று முல்லை மலர்கள் அலர் தூற்று கின்றனவாம். இடைச்சியரின் பற்களும் கூந்தலும் முறையே முல்லை யையும், களாவின் பழத்தையும் ஒத்தன என்பது கருத்தாகும். களவின் பழம் கருநிறம் உடைத்தாதலைக் 'களங்கனியைக் கார் எனச் செய்தா ரும் இல்' (நாலடி. 103) எனக் கூறுமாற்றானும் அறியலாம்.
ஒருபுறம் இடைச்சியரின் அழகு, பிறிதொருபுறம் முல்லை நிலச் சிறப்பு ஆகிய இரண்டும் ஒருங்கு தோன்ற அமைத்துள்ள அழகு காணத் தக்கது. அம்மட்டோ! 'பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்'(குறள், 186) 'ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு' (குறள், 190) எனவரும் அறப் பண்புகளையும் இதன் வழிப் புலப்படுத்தியிருக் கும் சேக்கிழாரின் அரிய புலமை நலமும் வெளிப்படுகின்றது. அளவு கண்டு - அவ்வியல்பினை அறிந்து.

மங்கை யர்க்குவாள் விழியிணை
தோற்றமான் குலங்கள்
எங்கும் மற்றவர் இடைக்கிடை
மலர்க்கொடி யெங்கும்
அங்கண் முல்லையின் தெய்வமென்
றருந்தமிழ் உரைக்கும்
செங்கண் மால்தொழும் சிவன்மகிழ்
திருமுல்லை வாயில்.

[ 18]


அம்முல்லை நிலத்து இடைச்சியர்களின் கூரிய வாள் போலும் இணைவிழிகளுக்குத் தோற்ற மான் கூட்டங்கள் எங்கும் காணப்படுவன. மற்று அவ் இடைச்சியரின் சிறிய இடையின் அழகிற்குத் தோற்று வாடுவ போன்று முல்லைக் கொடிகள் எங்கும் காணப்படுவன. அவ்விடத்து முல்லை நிலத்தின் தெய்வம் என அரிய தமிழ் நூல்களில் சொல்லப்பெறும் சிவந்த கண்களையுடைய திருமால் வழிபட்ட, சிவபெருமான் மகிழ்ந்து உறையும் திருமுல்லைவாயில் என்னும் திருப்பதியும் உளது.

குறிப்புரை: திருமுல்லைவாயில் - சிவபெருமான் முல்லைக் கொடி யின் கீழ் எழுந்தருளி இருக்கும் சிறப்பால் இப்பெயர் பெற்றது. பெரும்புகழுடைய தொண்டைமான் என்னும் அரசன் பட்டத்து யானை மீது வரும்பொழுது, யானையின்கால் முல்லைக் கொடியால் பிணிப்புண்டு வருந்த, அவன் அக்கொடிகளை வெட்டினான். வெட்டுதலும், அது அவ்விடத்து மறைந்திருந்த பெருமானின் திருமேனியில் பட, அவ்விறைவனும் வெளிப் பட்டருளினன் என்பது வரலாறு.
இத்திருப்பதி சோழநாட்டிலுள்ள திருமுல்லைவாயில் என்னும் திருப்பதியின் வேறாயது. இவ்வேற்றுமை தோன்ற இதனை வட திருமுல்லைவாயில் என அழைப்பர். சென்னையை அடுத்த அம்பத்தூருக்கு வடமேற்கில் இத்திருப்பதி உள்ளதாகும். முல்லையின் தெய்வம் என்னாது 'தெய்வம் என்று உரைக்கும்' என்றது, அந்நிலத் தெய்வமாகிய பெருமானும் இறைவனின் ஏவல் வழி நின்றே காத்து வருகின்றான் என்பது தோற்றவரும். 'படைத்தவை காப்போற் காக்கும் கடவுள்'(தி. 8 ப. 3 வரி 13,14) என வரும் மணிமொழியும் காண்க.
அருந்தமிழ் என்றது அகத்தியம், தொல்காப்பியம் முதலிய அருந்தமிழ் நூல்களைக் குறிக்கும். 'மாயோன் மேய காடுறை யுலகமும்'(தொல். அகத். 5) எனவரும் தொல்காப்பியமும் காண்க.

நீறு சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடிமேல்
மாறில் கங்கைதான் வாக்கும்மஞ் சனம்தர அணைந்தே
ஊறு நீர்தரும் ஒளிமலர்க் கலிகைமா நகரை
வேறு தன்பெரு வைப்பென விளங்குமா முல்லை.

[ 19]


திருநீற்றின் ஒளி விளங்கும் திருமேனியை யுடைய பெருமானின் பிறை திகழும் திருமுடிமேல் விளங்கிடும் கங்கை ஆறானது, அப்பெருமானுக்குத் திருமுழுக்கிற்கு எனச் சொரியும் நீராக அமையுமாறு வந்து அணைந்து, ஊறுகின்ற நீரைத் தருகின்ற ஒளி விளங்கும் மலர்களையுடைய கலிகை மாநகர் எனப் படும் திருவூறல் எனும் திருப்பதியையும் இம்முல்லைநிலம் தனக் குரிய ஒரு சேமவைப்பாகக் கொண்டிருக்கின்றது.

குறிப்புரை: 'நீறுசேர்வதொர்மேனியர்'(தி. 1 ப. 135 பா. 1) எனும் தொடர் ஆளுடைய பிள்ளையாரால் எடுத்தாளப் பெற்ற அரிய தொட ராகும். கலிகை மாநகர் - இது தக்கோலம் எனவும், திருவூறல் எனவும் வழங்கப்பெறும்.

வாச மென்மலர் மல்கிய முல்லைசூழ் மருதம்
வீசு தெண்டிரை நதிபல மிக்குயர்ந் தோடிப்
பாச டைத்தடந் தாமரைப் பழனங்கள் மருங்கும்
பூசல் வன்கரைக் குளங்களும் ஏரியும் புகுவ.

[ 20]


நறுமணம் உடைய மெல்லிய முல்லைமலர்கள் சிறந்து விளங்கிடும் முல்லை நிலத்தை அடுத்த மருத நிலத்தில், வீசிடும் தெள்ளிய திரைகளையுடைய ஆறுகள் பல, மிக உயர்ந்த நீர்ப் பெருக் குடன் ஓடிச் சென்று, பசிய இலைகளையுடைய பெருந் தாமரைப் பூக் கள் மலர்தற்கிடமாகிய வயல்களின் பக்கங்களில், நீர்ப் பெருக்கின் ஒலி மிகுந்த பெரும் கரைகளையுடைய குளங்களிலும் நீர்த் தேக்கங்களி லும் புகுவன.

குறிப்புரை: பாசடை - பசுமையான இலைகள். பூசல் - நீர்ப் பெருக் கின் ஒலி.

Go to top
துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே
அங்கண் நித்திலஞ் சந்தனம் அகிலொடு மணிகள்
பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி.

[ 21]


மேலான பெருந்தவமுடைய வசிட்ட முனிவனின் பசுவாய காமதேனுவின் திருமுலை சொரிந்த பாலானது, பொங்கும் புனித நீராக (தீர்த்தமாய்) நந்திமலை எனும் பெருமலையினின்றும் அருவிகளாக உருக்கொண்டு, அங்குள்ள முத்துக்கள், சந்தனம், அகில், இவற்றோடு இன்னும் பல நல்ல மணிகளையும் அரித்துக் கொண்டு, பாலி எனும் பெயருடைய ஆறாகப் பெருகி வந்து, தாம ரைக் குளங்கள் பலவற்றையும் நிறைத்திட ஓடிவரும் சிறப்பினை யுடையது.

குறிப்புரை: காமதேனுவின் பால் ஆறாக ஓடி வருதலின் பாலியாறு எனப் பெயர் பெற்றது.
நந்திமலையில் தவம் செய்து கொண்டிருந்த வசிட்டர் இருக் கையில், அங்குப் பணிபுரிந்து கொண்டிருக்கும் காமதேனு, பெருமா னின் ஆனேற்றுக் கடவுளை (இடபதேவர்) விரும்ப, அதனை அறிந்த வசிட்டர் ஒரு தருப்பையை எடுத்து எறிய, அது கன்றாக, அதனைக் கண்ட காமதேனு, பால் சொரியலாயிற்று. அப்பெருக்கே பாலியாறா யிற்று என்பது புராண வரலாறு.

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்துகை வருட
வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப்
பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி.

[ 22]


சிறுபிள்ளை தனது கையால் தடவப் பெருகும் பாலைச் சொரியும் மார்பகங்களையுடைய தாய்போல, உழவர்கள் வேனிற்காலத்து வேளாண்மை செய்யும் பருவக் காலத்து மணல் திடர்களைக் கைகளால் பிசைந்து தோண்டி ஒழுங்கு செய்திட, அவ்வாய்க் கால் வழிவரும் வெள்ள நீர், அதன் இரு மருங்கும் வழிக்கொண்டு, பள்ளமாய பண்ணை வயல்களில் உள்ள பருத்த மடை வரம்புகளை உடைக்கும்.

குறிப்புரை: வேண்டும் பொழுது நீரைச் சுரந்தும், வேண்டாத பொழுது தன்னுள் அடக்கியும் இருக்கும் பெருமையுடையது என்பது இதனால் விளங்கும்.

அனைய வாகிய நதிபரந்
தகன்பணை மருங்கில்
கனைநெ டும்புனல் நிறைந்துதிண்
கரைப்பொரும் குளங்கள்
புனையி ருங்கடி மதகுவாய்
திறந்திடப் புறம்போய்
வினைஞர் ஆர்ப்பொலி யெடுப்பநீர்
வழங்குவ வியன்கால்.

[ 23]


அவ்வாறாகிய பாலியாற்று நீர் பரந்து, அகன்ற வயல்களின் பக்கலில் இரைந்து பெருகவரும் திண்மையான பெரிய குளக்கரையில், அங்குள்ள சிறந்த அழகுபடுத்தப்பட்ட காவல் மதகு கள் வாய்திறந்திட, வெளியே சென்று பெருகும் தன்மை கண்டு, அவ் விடமுள்ள வீரராய உழவர்கள் தம் மகிழ்வால் ஒலிசெய, பெருவாய்க் கால்கள், நீர் பெருகி வரும்.

குறிப்புரை: 'உழவரோதை மதகு ஓதை உடைநீர் ஓதை தண்பதங் கொள், விழவரோதை சிறந்தார்ப்ப நடந்தாய்வாழி காவேரி' (சிலப்ப. புகார்க். கானல்- 4) என்னும் சிலப்பதிகாரமும்.

மாறில் வண்பகட் டேர்பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின் வெண்முளை சிதறி
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவ ரான
வேறு பல்வினை யுடைப்பெருங் கம்பலை மிகுமால்.

[ 24]


இத்தகைய வளம் மிக்க மருதநிலத்தில், எருமைக் கடாக்களைப் பூட்டி ஏர்கள் பல நெருங்கிட வயலினைச் சேறுசெய் வாரும்,செந்நெல்லின் வெண் முளைகளைச் சிதறி நாற்று விடுவார் களும், நாற்றைப் பறிப்பார்களும், நடுபவர்களும் ஆகப் பல்வேறு செயல்களைச் செய்வோரின் பேரோசை அவ்வயல்கள் எங்கும் மிகுந்திருக்கும்.
குறிப்புரை:

வரும்பு னற்பெருங் கால்களை மறித்திட வாளை
பெருங்கு லைப்பட விலங்குவ பிறங்குநீர்ப் பழனம்
நெருங்கு சேற்குல முயர்த்துவ நீள்கரைப் படுத்துச்
சுருங்கை நீர்வழக் கறுப்பன பருவரால் தொகுதி.

[ 25]


நீர் ஓடி வரும் பெரு வாய்க்கால்களை வாளை மீன்கள் குறுக்கிட்டுத் தடுத்திட, அத்தன்மையால் அவ்விடத்து நீர் தேங்கிக் கரைகள் உடைபடும்படி நீருடைய அவ்வாய்க்கால்கள் நீர் நிறைந்து விலகிப் போகின்றன. வயல்களில் நெருங்கி வரும் சேல் மீன்கள் பள்ளமாய வயல்களில், தம் தொகையால், கரையை உயர்த்துகின்றன. மதகுகளுட் புகுந்து வரும் நீர் வெளி வாராதபடி பெருத்த வரால் கூட்டங்கள் திரண்டு நின்று தடுக்கின்றன.
குறிப்புரை: நீர்வளமும், அதன்கண் வாழும் வாளை, சேல், வரால் ஆகிய மூவினங்களின் வளமும் விளக்கியவாறு.

Go to top
தளைத்த டம்பணை எழுந்தசெந் தாமரைத் தவிசின்
இளைத்த சூல்வளை கண்படுப் பனஇடை யெங்கும்
விளைத்த பாசொளி விளங்குநீள் விசும்பிடை யூர்கோள்
வளைத்த மாமதி போன்றுள மருதநீர் வைப்பு.

[ 26]


நீர்வளத்தால் சிறந்த அகன்ற கரைகளையுடைய வயலில், முளைத்து எழுந்த செந்தாமரை மலர்களாகிய இருக்கை களில், சூல் முதிர்ந்து இளைப்புற்றுத் துயில் கொள்ளும் சங்குகள், பசிய நீல ஒளி விளங்கும் நீண்ட வானத்திடைச் சிவந்த ஒளி சூழ்ந்த நிறை மதியைப் போன்றுள்ளன.
குறிப்புரை: தளை - வரம்பு (வரப்பு). பசுமையான பயிர்கள் நிறைந் திருப்பது நீல வானம் போல்வது. செந்தாமரையில் இருக்கும் சங்குகள், சிவப்பொளிசூழ்ந்த மதியைப் போல்வனவாயின. நீரிடை உறங்கும் சங்கம் (கம்பரா. பால. நாட். 6) என்பர் கம்பரும்.

ஓங்கு செந்நெலின் புடையன உயர்கழைக் கரும்பு
பூங்க ரும்பயல் மிடைவன பூகம்அப் பூகப்
பாங்கு நீள்குலைத் தெங்குபைங் கதலிவண் பலவு
தூங்கு தீங்கனிச் சூதநீள் வேலிய சோலை.

[ 27]


ஓங்கி வளர்ந்த செந்நெல் பயிரின் பக்கமாக உயர்ந்த கழைக் கரும்புகள் உள்ளன. பூக்கள் நிறைந்த அக்கரும்பின் அயலே பாக்கு மரங்கள் உள்ளன. அக்கமுக மரங்களின் அருகே நீண்ட குலைகளுடன் விளங்கிடும் தென்னைகள், பருத்துச் செழித்த வாழைகள், பழம் நிறைந்த பலா மரங்கள், தொங்குகின்ற தித்திப்பாய கனிகளையுடைய மாமரங்கள் ஆகியன அங்குள்ள சோலைகளின் வேலியாகவுள்ளன.
குறிப்புரை:

நீடு தண்பணை உடுத்தநீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய விருந்தெதிர் கொள்ளும்
பீடு தங்கிய பெருங்குடி மனையறம் பிறங்கும்
மாட மோங்கிய மறுகின மல்லல்மூ தூர்கள்.


[ 28]


வளம் பொருந்திய பழமையான ஊர்கள், குளிர்ச்சி பொருந்திய பெரிய வயல்களால் சூழப்பெற்றுள்ளன. அவ் வூர்கள் நெற்கூடுகள் தங்கிய வீடுகளை உடையன. அவ்வீடுகள், விருந் தினரின் வருகையை எதிர்கொள்ளும் பெருமை தங்கிய பெருங் குடிகளையுடையன. அவ்வீடுகள், இல்லறம் சிறக்க வாழ்ந்திடும் மாடங்களாகத் திகழ, இருபுறமும் ஓங்கிய வீதிகளை உடையன.
குறிப்புரை:

தொல்லை நான்மறை முதற்பெருங் கலையொலி துவன்றி
இல்ல றம்புரிந் தாகுதி வேள்வியில் எழுந்த
மல்கு திண்புகை மழைதரு முகிற்குலம் பரப்பும்
செல்வ மோங்கிய திருமறை யவர்செழும் பதிகள்.

[ 29]


திருமறையவர் வாழும் ஊர்கள், பழமையான நான்மறைகள் முதலாய பெருங்கலைகளை ஓதுதலால் வரும் ஓசை பெருகி விளங்கிட, இல்லற நெறியில் நின்று செய்யும் வேள்வியில் எழுந்த பரந்திடும் திண்ணிய புகையால், அவ்விடத்து மழையைத் தரும் முகிற் கூட்டங்கள் நிறைந்திட, அப்பயனால் செல்வம் ஓங்கி நிற்பன.
குறிப்புரை: வேள்வி நற்பயன் வீழ்புனலாவது என்பவாகலின், 'மல்கு திண்புகை மழைதரும் முகிற் குலம்' என்றார்.

தீது நீங்கிடத் தீக்கலி யாம்அவு ணற்கு
நாதர் தாமருள் புரிந்தது நல்வினைப் பயன்செய்
மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்.

[ 30]


தீது நீங்கும்படியாகத் தீக்காலி எனும் பெயரு டைய ஓர் அசுரனுக்கு, இறைவன் அருள் புரிந்ததும், நல்வினைப் பயனைச் செய்தற்கேற்ற பெண்கள் இருவரைப் பெற்ற மாதவமுடைய மறையவர்கள் வாழ்ந்து வருவதுமான திருவல்லம் என்னும் திருப்பதி யானது, திருநீறும் உருத்திராக்கமும் ஆகிய சிவச்சின்னங்களைப் போற்றிவரும் சிறப்பினால் விளக்கம் பெற்றிருக்கும்.
குறிப்புரை: தீக்காலி என்னும் அசுரன் திருமாலின் சக்கரத்தால் தான் இறவாதிருக்கப் பெருமானை வேண்ட, அவனுக்கு அருள் செய்த திருப்பதி தீக்காலிவல்லமாகும். மறையவன் ஒருவன் ஆண் மகவு வேண்ட, இறைவன் அவனுக்கு இரு பெண் மக்களை அருள, அவர் களை அவன் இறைத்தொண்டிற்கு ஆளாக்குமாறு வேண்ட, பெரு மானும் அருளினன் என்பது மற்றொரு வரலாறு.

Go to top
அருவி தந்தசெம் மணிகளும் புறவில்ஆய் மலரும்
பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின்
மருவு கங்கைவாழ் சடையவர் மகிழ்ந்தமாற் பேறாம்
பொருவில் கோயிலுஞ் சூழ்ந்ததப் பூம்பணை மருதம்.

[ 31]


குறிஞ்சி நிலத்து அருவியிலிருந்து பெருகிய ஆறுகள் அரித்துத்தந்த செம்மணிகளும், முல்லைநிலச் சோலையில் அவ்ஆறுகள் வாரி வரும் மலர்களும் கலந்து, அவ்ஆற்று நீர் பரந்த ஓடைகளில் நிறைந்து வழிந்திட ஓடும் அப்பாலியாற்றின் கரையில், கங்கையாறு மருவி விளங்கிடும் சடையையுடைய சிவபெருமான் மகிழ்ந்து உறையும் திருமாற்பேறு என்னும் ஒப்பற்ற அருள் நிறைந்த கோவிலும் இருந்தருளும் பேறுடையது அவ்வழகிய வயல் சூழ்ந்த மருதநிலம் ஆகும்.
குறிப்புரை: திருமாற்பேறு - திருமால் வழிபட்டுச் சக்கரம் பெற்றமை யினால் இப்பெயர் பெற்றது.

விரும்பு மேன்மையென் பகர்வது விரிதிரை நதிகள்
அருங்க ரைப்பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து
பருங்கை யானையை உரித்தவர் இருந்தஅப் பாசூர்
மருங்கு சூழ்தவம் புரிந்ததன் றோமற்ற மருதம்.

[ 32]


விரிந்த அலைகளையுடைய ஆறுகளின் அரிய கரைகளில் மருவி விளங்கிடும் சிவபெருமானின் திருக்கோவில்கள் பலவும் அங்குளவாய், பருத்த துதிக்கையையுடைய கயாசூரன் என்னும் யானை வடிவுடையானை உரித்த பெருமான் வீற்றிருந் தருளும் திருப்பாசூர் என்னும் திருப்பதியும், அம் மருத நிலத்தின் இடையில் இருத்தற்கு மற்று இந்த மருத நிலம் பெருஞ் சிறப்புடைய தவம் புரிந்ததன்றோ? அவ்வனமாக அனைவராலும் விரும்பப்படும் மருத நிலத்தின் மாண்பை என் என்று கூறுவது!
குறிப்புரை: பாசூர் - இறைவன் மூங்கிலடியில் எழுந்தருளியதால் இப்பெயர் பெற்றது. பாசு - மூங்கில்.

பூம ரும்புனல் வயற்களம் பாடிய பொருநர்
தாம ருங்கிளை உடன்தட மென்மலர் மிலைந்து
மாம ருங்குதண் ணீழலின் மருதயாழ் முரலும்
காமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.

[ 33]


மலர்கள் நிறைந்த நீர்சூழ்ந்த வயலின் வளத்தைச் சிறப்பிக்கும் மருதப் பண்ணைப் பாடுகின்ற பொருநர்கள், தாங்கள் தம் அரிய கிளைகளுடன் குளத்தில் மலரும் மிருதுவான நீர்ப்பூக்களைச் சூடிக்கொண்டு, பெரிய மாமரங்களின் நிழலில் இருந்து, தங்கள் கையில் கொண்ட மருத யாழை வாசித்து மகிழும், அழகிய குளிர்ந்த வயலுடைய மருத நிலத்தின் புறமாக உள்ளது, கறுத்த கழிநிலமாய நெய்தல் நிலம் ஆகும்.
குறிப்புரை:

தூய வெண்டுறைப் பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள்விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேரளத் தளவர்கள் அளப்பன உப்பு
சாயல் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்.

[ 34]


இந்நெய்தல் நிலத்தில், தூய வெண்மணற் பரப் புடைய துறைகளில் வாழும் பரதவர்களால் தொடுக்கப்படுவன மீன் பிடிக்கும் வலைகள். சிவந்து நீண்ட அழகிய கண்களையுடைய பரத்தியர்களால் தொடுக்கப்படுவன செருந்தி மலர் மாலைகள். பெரிய உப்பளங்களில் அளவர்களால் அளக்கப்படுவது உப்பு. அங்குள்ள சாயலையும் மெல்லிய இடையையும் உடைய அளத்தியர்களால் அளக்கப்படுவன முத்துகள்.
குறிப்புரை: பரதவர், பரத்தியர், அளவர், அளத்தியர் என்பன நெய்தல் நிலத்து வாழும் மக்கட்குரிய பெயர்களாம்.

கொடுவி னைத்தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படும ணற்கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடுக டற்சங்கு துறையவர் குளிப்பன அவர்தம்
வடுவ கிர்க்கண்மங் கையர்குளிப் பனமணற் கேணி.

[ 35]


கொடிய செயலாய மீன்பிடிக்கும் தொழிலை யுடைய நுளையர்களால் கொடுக்கப்படுவன கொழுத்த மீன்கள். நுளைச்சியர்களால் கொடுக்கப்படுவன கடற்கரையில் இருக்கும் மணலிடத்து வரும் பவளங்கள். தோண்டப்பெற்றதாய்ப் பரந்திடும் கடலிடத்து வாழும் துறையவர்களால் குளித்து எடுக்கப்படுவன சங்குகள். மாவடுவின் வனப்புடைய கண்களையுடைய அத்துறைய வர்களது பெண்களால் குளிக்கப் படுவன மணற் கேணிகள்.
குறிப்புரை: சகரரால் தோண்டப் பெற்றது கடல் என்பது பற்றித் தொடுகடல் என்றார். துறையர் - நெய்தல் நிலத்து மக்கட் பெயர்களில் ஒன்று. குளிப்பன என வருவனவற்றுள், முன்னையது கொழித்து எடுப்பன எனும் பொருள்படும்; பின்னையது நீருட் குளிப்பது (நீராடுவது) எனும் பொருள்படும்.

Go to top
சுழிப்பு னற்கடல் ஓதமுன் சூழ்ந்துகொண் டணிய
வழிக்க ரைப்பொதிப் பொன்னவிழ்ப் பனமலர்ப் புன்னை
விழிக்கு நெய்தலின் விரைமலர்க் கண்சுரும் புண்ணக்
கழிக்க ரைப்பொதி சோறவிழ்ப் பனமடற் கைதை.

[ 36]


சுழிகளுடன் கூடிய நீர் நிறைந்த கடல் சூழ்ந்து நிற்கும் இடத்தருகே உள்ள வழிக்கரையில், பல மலர்களையுடைய புன்னை மரங்கள், தம் மலர்களில் பொதிந்து கிடக்கும் மகரந்தப் பொடிகளை அவிழ்த்துக் கொடுப்பன. உடன் மலர்கின்ற நெய்தல் பூக்களில் தங்கி இருந்த வண்டினங்கள் உண்ணுமாறு, கழிக்கரையி னிடத்து இருக்கும் தாழை மரங்கள், தம்மிடத்துக் கொண்டிருக்கும் சோற்றினை அவிழ்த்துக் கொடுப்பன.
குறிப்புரை: புன்னை மரங்களின் பொடி பொன்னிறமுடைய தாதலின் பொன்னைச் சொரிவன என்றார். நெய்தல் நிலம், தன் வழிக் கரையில் செல்வார்க்குப் (உயர்திணை) பொன்னும், கழிக்கரையில் இருப்பார்க்குச் (வண்டினங்களுக்கு: அஃறிணை) சோறும் தந்துதவு மாற்றான், எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணியிரங்கும் தெய்வ அருட்கருணையுடைய தாதல் விளங்கும்.

காயல் வண்கரைப் புரைநெறி அடைப்பன கனிமுள்
சேய தண்ணறுஞ் செழுமுகை செறியும்முண் டகங்கள்
ஆய நுண்மணல் வெண்மையை மறைப்பன அன்னந்
தாய முன்துறைச் சூழல்சூழ் ஞாழலின் தாது.

[ 37]


உப்புவிளையும் கடல் ஓரத்தில் விளங்கிடும் கரைகளில் உள்ள குற்றம் உடைய சிறுவழிகளை அடைப்பன, முதிர்ந்த முள்கள் பொருந்திய சிவந்த நறிய செழுமுகை கொண்ட முள்ளிச் செடிகள். அவ்விடத்தில் பரந்திருப்பதாய நுண்ணிய வெண் மணற் பரப்பின் வெள்ளை நிறத்தை, அன்னப் பறவைகள் தாவி விளையா டும் முன்கரையின் இடத்தினில் சூழ வளர்ந்திருக்கும் குங்கும மரங்கள், தம் மகரந்தப் பொடிகளைச் சொரிந்து மறைப்பன.

குறிப்புரை: காயல் - கழிக்கானல் எனலுமாம். முண்டகங்கள் - முள்ளிச் செடிகள். ஆய - அவ்விடத்துள்ள.
கடற்கரையிலுள்ள சிறு வழிகள், அவ்வப்பொழுதும் அலைகளால் அரிக்கப்பெற்று உடைப்பும் சிறுசிறு துளைகளும் உடையனவாய் இருக்கும். இதுபற்றியே 'புரை நெறி' (குற்றமுடைய வழி) என்றார். இவற்றை அங்குள்ள முட் செடிகள் மறைக்குமாற்றான், அற்ற மறைக்கும் பெருமை அவற்றிற்கு உளதாதல் பெறுதும். கடற் கரையில் உள்ள நுண்மணலின் வெண்மையை மறைக்குமாற்றான், அது அம்மணலின் புல்லறிவாண்மையை மறைத்து அதனைப் பெரிது படுத்தாமை விளங்குகின்றது.
வெண்மை - புல்லறிவாண்மை. இவ்வாறெல்லாம் அழகு படுத்திக் காட்ட வல்லவர் தெய்வச் சேக்கிழாரன்றி வேறு யார்தாம் செய்ய வல்லார்? யாரே அழகுக் கழகு செய்வார்?

வாம்பெ ருந்திரை வளாகமுன் குடிபயில் வரைப்பில்
தாம்ப ரப்பிய கயல்களின் விழிக்கயல் தவிரக்
காம்பின் நேர்வருந் தோளியர் கழிக்கயல் விலைசெய்
தேம்பொ திந்தசின் மழலைமென் மொழியசெவ் வழியாழ்.

[ 38]


தாவி அலைக்கின்ற பெருந்திரைகளையுடைய கடலின் முன்னாகவுள்ள குடிகளின் இருப்பிடங்களில், மூங்கிலின் வனப்புடைய பசிய தோள்களையுடைய பரதவப் பெண்கள், தாம் பரப்பியிருக்கும் கயல் மீன்களுள், கண்களாகிய மீன்களைத் தவிர, ஏனையவற்றை விலைபேசி விற்பனை செய்திடும், தேனின் இனிமை பொதிந்த தித்திப்புடைய மழலையான மெல்லிய சொற்களின் இனி மையை, நெய்தல் நிலச் செவ்வழியாழ் பெற்றிருக்கும்.
குறிப்புரை: வாம் - தாவும். காம்பு - மூங்கில். விழிக்கயல், கழிக் கயல் என்பன சொல்லழகு தோன்ற நிற்பதுடன், விழிக்கயல் தவிரக் கழிக்கயலையே விற்பர் என்பதால், அவர்தம் கற்புத் திண்மை தோன்ற நிற்கும் பொருள் அழகும் தோன்ற நிற்கின்றது.

மருட்கொ டுந்தொழில் மன்னவன் இறக்கிய வரியை
நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கலென் றெழுதும்
ஒருத்தர் தம்பெருங் கோயிலின் ஒருபுறஞ் சூழ்ந்த
திருப்ப ரப்பையும் உடையதத் திரைக்கடல் வரைப்பு.


[ 39]


மயக்க மிகுதியால் கொடுந்தொழில் செய்த ஓர் அரசன், கோவில் வழிபாடுகளில், அதற்கெனப் பொருளைக் குறைத் துக் கொள்ள எழுதிய வரிகளில் 'நெருக்கித் திருவொற்றியூர் நீங்கலாக' என்று எழுதிய ஒப்பற்றவராய பெருமானின் திருக்கோவிலும் சூழ்ந்திருக்கும் திருவுடைய பரந்த நிலத்தையுடையது, இக் கடல் சூழ்ந்த நெய்தல் நிலம் ஆகும்.
குறிப்புரை: மன்னவன் - மாந்தாதா என்னும் அரசன். அயோத் தியில் அரசு செய்த இவன், மூப்பும், பிணியும் மிக வருத்திய நிலையில் இறக்க எண்ணினான். அது பொழுது அதற்கு ஏதுவாகச் செயத்தக்கது யாது? எனச் சிலரை வினவ, அவர்கள் புண்ணியச் செயல்களுக்கென முன் வகுத்துக் கொடுத்த பொருட்களைக் குறைத்துக் கொடுப்பின் அவ் வெண்ணம் நிறைவேறும் என, அவனும் அவ்வக்கோவில்களுக்கும் உள்ள அறக்கட்டளைகளைக் குறைத்து எழுதிக் கொடுத்தனன். மறு நாள் அவ்வேட்டினைப் பார்க்க நேர, தான் முன் எழுதிய ஆவணவரி களில் இடையிட்டுத் 'திருவொற்றியூர் நீங்கலாக' என எழுதப் பெற்றிருந்தது. அது கண்ட அரசன் திருவொற்றியூர்ப் பெருமானின் திருவருளே எனக் கருதி, அப்பெருமானுக்கு மேலும் பல சிறப்பு வழிபாடுகளைச் செய்து பிணியும், மூப்பும் நீங்கப் பெற்றனன் எனும் வரலாற்றை இப்பாடல் உட்கொண்டதாகும். இறக்கிய- குறைத் தெழுதிய. நெருக்கி - 'திருவொற்றியூர் நீங்கலாக' எனும் தொடரை, அவ்வாவண வரிகளில் வரிபிளந்து நெருக்கி எழுதிய.

மெய்த ரும்புகழ்த் திருமயி லாபுரி விரைசூழ்
மொய்த யங்குதண் பொழில்திரு வான்மியூர் முதலாப்
பைத ரும்பணி அணிந்தவர் பதியெனைப் பலவால்
நெய்தல் எய்தமுன் செய்தஅந் நிறைதவம் சிறிதோ.

[ 40]


மெய்ம்மையை உறுதிப்படுத்தும் பெரும்புகழ் கொண்ட திருமயிலாபுரி எனும் திருப்பதியும், நறுமணம் கமழும் வண்டுகள் மொய்த்திடும் சிறந்த குளிர் தூங்கும் சோலைகளையுடைய திருவான்மியூர் என்னும் திருப்பதியும் முதலாக, நச்சுப்பை உடைய பாம்பினை அணிந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பதிகள் பலவும் அங்குள்ளன. ஆதலால் இனைய பல திருப்பதிகள் இங்கு இருத்தற்கு இந்நெய்தல் நிலம்முன் செய்த நிறைந்த தவம் சிறிதோ? அன்று; மிகப் பெரிதாகும்.
குறிப்புரை: மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் இறைவழிபாடும், அடியவர் வழிபாடுமே என்பது உண்மையானால் உலகர் முன் வருகவென ஞானசம்பந்தர் அருள, பூம்பாவை உருப்பெற்று உலகர் முன் வந்தமையின், மெய்ம்மையை நிலைநாட்டிய புகழுக்குரியது திரு மயிலாப்பூர் ஆகும்.

Go to top
கோடு கொண்டெழும் திரைக்கடற் பவளமென் கொழுந்து
மாடு மொய்வரைச் சந்தனச் சினைமிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால்
ஆடு நீள்கொடி மாடமா மல்லையே அனைய.

[ 41]


சங்குகளைத் தம்மிடத்துக் கொண்டு எழுகின்ற திரைகளை உடைய கடலில் படர்ந்திடும் பவளமாகும் மெல்லிய கொடிகள், வளர்ந்து ஓங்கி, அருகில் இருக்கும் பெருமலை மீதில் நின்ற சந்தன மரத்தினில் படர்ந்து வளரும். இத்தகைய நீண்ட நெய்தல் நிலமும், குறிஞ்சி நிலமும் மயங்கி (கூடி) நிற்கும் இடங்கள் பலவற் றுள், ஆடுகின்ற நீண்ட கொடிகளுடன் விளங்கிடும் மாமல்லை நகரம் போன்றனவும் பலவாம்.
குறிப்புரை: 'திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே,நிலன் ஒருங்கு மயங்குதல் இன்றென மொழிப, புலன்நன் குணர்ந்த புலமை யோரே' 'உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே'(தொல். அகத். 12,13) எனத் தொல்காப்பியம் கூறும் திணை மயக்கத்திற்கேற்ப, இப்பாடல் முதலாகத் திணை மயக்கம் கூறப் பெறுகின்றது. பவளக் கொடி நெய்தற் கருப்பொருள். சந்தனமரம் குறிஞ்சிக் கருப்பொருள். அப்பவளக் கொடிபடரச் சந்தனமரம் உள்ளது எனவே, நெய்தலும் குறிஞ்சியும் மயங்கியவாயின.

மலைவி ழிப்பன எனவயற் சேல்வரைப் பாறைத்
தலையு கைப்பவுந் தளைச்செறு விடைநெடுங் கருமான்
கலைகு திப்பன கரும்பகட் டேர்நிகர்ப் பவுமாய்
அலைபு னற்பணை குறிஞ்சியோ டணைவன அனேகம்.

[ 42]


மலைகள் கண் விழித்துப் பார்ப்பன போல, வயலில் நின்றும் துள்ளிப் பாய்ந்த சேல் மீன்கள், மலையிடத்துப் பாறையில் பாய்ந்து புரண்டு நிற்பனவும், வரம்புகளை உடைய வயல்களின் பகுதியில் கருமையுடைய எருமைகள் ஏரிற் பூட்டிப் போவதை ஒப்ப, நெடிய கருமையுடைய கலைமான் கலைகள் குதித்தோடுவனவும், ஆகிய இத்தன்மைகளால் நீர்ப்பெருக்குடைய மருதநிலம், குறிஞ்சியுடன் கலந்திருக்கும் இடங்கள் பலவாம்.
குறிப்புரை: மலையும், மானும் குறிஞ்சி நிலத்தன. மீனும், எருமையும் மருத நிலத்தன. இவ்விரண்டும் மயங்கின.

புணர்ந்த ஆனிரைப் புறவிடைக் குறுமுயல் பொருப்பின்
அணைந்த வான்மதி முயலினை இனமென அணைந்து
மணங்கொள் கொல்லையில் வரகுபோர் மஞ்சன வரைக்கார்
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்.

[ 43]


பசுக் கூட்டங்களையுடைய முல்லை நிலத்திருந்த சிறுமுயல், மலையின் மீதாக வானில் அணைகின்ற முழுமதியின் முயற் கறையைத் தனது இனமாய முயல் என நினைந்து அதனை அணைந்திட மலை உச்சியில் செல்வதும், முல்லைப் பூவின் மணம் கொண்ட முல்லைக் கொல்லையில் இருந்த வரகின் போர்களில், கறுத்த மலைகளின் மீது நீரைப் பொழியும் மேகங்கள் வந்து படிந்து இருப் பதும் ஆய நிகழ்ச்சியினால் முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் கலந்த இடங்களும் பல உள.

குறிப்புரை: ஆனிரைகளும், முயலும், வரகும் முல்லை நிலத்தன. மலை குறிஞ்சி நிலத்தது.
இவ்வகையில் இவ்விரு திணைகளும் மயங்கின.

கவரும் மீன்குவை கழியவர் கானவர்க் களித்துச்
சிவலுஞ் சேவலும் மாறியுஞ் சிறுகழிச் சியர்கள்
அவரை ஏனலுக் கெயிற்றியர் பவளமுத் தளந்தும்
உவரி நெய்தலுங் கானமுங் கலந்துள ஒழுக்கம்.

[ 44]


தாம் பிடிக்கின்ற மீனின் குவியலைப் பரதவர்கள், வேடர்களுக்குக் கொடுத்து, மாறாக அவரிடமிருந்து கௌதாரி யையும், கோழிச் சேவலையும் பெற்றுக் கொள்வதும், சிறிய பரதவப் பெண்கள், தாம் இடைச்சியர் பால் பெறும் அவரைக்கும் தினைக்கும் மாற்றாக, பவளத்தையும், முத்தையும் அளந்து கொடுப்பதும் ஆகிய நிகழ்ச்சிகளால், கடல்சூழ்ந்த நெய்தல் நிலமும், முல்லை நிலமும் கலந்துள்ள இடங்கள் பலவுள.

குறிப்புரை: மீன், பவளம், முத்து ஆகியன நெய்தற் கருப்பொருள்கள். சிவல், சேவல், அவரை, தினை ஆகியன முல்லைக் கருப்பொருள்கள்.
இவ்வகையில் இவ்விரு திணைகளும் மயங்கின.

அயல்ந றும்புற வினில்இடைச் சியர்அணி நடையும்
வியன்நெ டும்பணை உழத்தியர் சாயலும் விரும்பி
இயலும் அன்னமும் தோகையும் எதிரெதிர் பயில
வயலும் முல்லையும் இயைவன பலவுள மருங்கு.

[ 45]


அயலே உள்ள நறிய முல்லை நிலத்தினில் வாழும் இடைச்சியரது அழகிய நடையினையும், அகன்ற வயல்களில் வாழும் உழத்தியரது சாயலையும் விரும்பி, இயங்குகின்ற அன்னப் பறவையும், மயிலும் முறையே எதிர் எதிர் பயில்வதால், மருதமும் முல்லையும் இயைந்து காணப்படும் இடங்கள் பலவுள.

குறிப்புரை: இடைச்சியரும், உழத்தியரும் முறையே முல்லை நிலத் திற்கும் மருத நிலத்திற்கும் உரியவர்கள். மயிலும், அன்னமும் முறையே முல்லை நிலத்திற்கும் மருத நிலத்திற்கும் உரியன. இவற்றால் இவ்விரு திணைகளும் மயங்கின. அன்னம் நெய்தற்கும், மயில் குறிஞ்சிக்கும் உரிய வாயினும் முல்லைக்கும் சிறுபான்மை உரியவாம்.

Go to top
மீளும் ஓதம்முன் கொழித்தவெண் தரளமும் கமுகின்
பாளை உக்கவும் விரவலிற் பரத்தியர் பணைமென்
தோளு ழத்தியர் மகளிர்மா றாடிமுன் தொகுக்கும்
நீளும் நெய்தலும் மருதமும் கலந்துள நிலங்கள்.

[ 46]


கடல் அலைகள் எழுந்து வந்து கரையில் மோதிப் பின் மீள இழுத்துப் புரளும் போது, கொழித்த வெண் முத்துக்களும், கமுகின் பாளைகள் உதிர்த்த மெல்லிய பூக்களும் சேர்வதனால், அவற்றைப் பரத்தியர்களும், பெருத்த மூங்கில் அனைய தோள்களை யுடைய உழத்தியர்களும் மாறாக, விளையாடலில் முன்னாக எடுத் தெடுத்து முத்துகளையும், கமுகம் பூவையும் மாலையாகக் கோக்கின்ற நீண்ட நெய்தல் நிலமும் மருத நிலமும் கலந்த நிலங்கள் பலவாக அங்கு உள்ளன.

குறிப்புரை: முத்துக்களும், கமுகுகளும் முறையே நெய்தல் நிலத்திற்கும் மருதநிலத்திற்கும் உரியன. இவற்றை இவ்விரு நிலத்து மகளிரும் தத்தமக்கு உரியவாகத் தொடுத்தலின் திணை மயக்க மாயிற்று.

ஆய நானிலத் தமைதியில் தத்தமக் கடுத்த
மேய செய்தொழில் வேறுபல் குலங்களின் விளங்கித்
தீய வென்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத்
தூய மாந்தர்வாழ் தொண்டைநாட் டியல்புசொல் வரைத்தோ.

[ 47]


இவ்வாறாக, நானிலங்களிலும் அமைதியாக வாழும் மக்கள், தத்தமக்குப் பொருந்திய தங்கள் நிலத்துக்குரிய செய்தொழில்களைப் பல்வேறு வகையாகச் செய்து வரும் நற்குணங் களால் விளங்கி, தீய என்பன கனவிலும் நினைவிலாத சிந்தை யுடையராய் வாழும் இத் தொண்டை நாட்டின் இயல்பு என் சொல் லளவில் அடங்குவதோ? அடங்காது,

குறிப்புரை: அமைதியானவாழ்வு,செய்தொழில் சிறப்பு, தீய என்பன கனவிலும் நினையாச் சிந்தை, தெய்வத் திருக்கோயில்களின் வளம் ஆகிய இவற்றைவிட ஒருநாட்டிற்குத் தேவையானதும் உண்டோ? இல்லை,
ஆதலின் அந்நாட்டின் பெருமை என் சொல் அளவைத்தோ? அன்று என்றார் ஆசிரியர்.

இவ்வ ளந்தரு பெருந்திரு நாட்டிடை என்றும்
மெய்வ ளந்தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப
எவ்வு கங்களும் உள்ளதென் றியாவரும் ஏத்தும்
கைவி ளங்கிய நிலையது காஞ்சிமா நகரம்.

[ 48]


இவ்வாறான வளம் தரும் பெருமையுடைய திருநாடாகிய தொண்டை நாட்டில், என்றும் உண்மையான வளம் தரும் சிறப்பினால், உலகம் எல்லாம் கண்டு வியந்திடும்படி எல்லா உலகங்களின் நலனும் இங்கு உள்ள தென்று யாவரும் போற்றுகின்ற பெருமை விளங்கிய நிலைமையுடையது காஞ்சி மாநகரம்.

குறிப்புரை: 'அரும்பொருள் தரூஉம் விருந்திற்றேஎம் ஒருங்கு தொக்கன்ன உடைப் பெருஞ்செல்வம்' (சிலப்பதிகாரம். புகார்க். மனைய. 5, 6) என்புழிப் போல, இந்நகரத்தும் அச்சிறப்பு அமைய நின்றது.

ஆன தொன்னகர் அம்பிகை தம்பெரு மானை
மான அர்ச்சனை யாலொரு காலத்து வழிபட்
டூன மில்அறம் அனேகமும் உலகுய்ய வைத்த
மேன்மை பூண்டஅப் பெருமையை அறிந்தவா விளம்பில்.

[ 49]


இவ்வாறாய பழமை வாய்ந்த காஞ்சி மாநகரத் திடத்து எம் தாயாகிய உமையம்மையார், தம் தலைவராகிய பெரு மானை மேலான வழிபாடு செய்ததன் வாயிலாக, ஒரு காலத்து உலகம் உய்யக் குறைவில்லாத அறங்கள் பலவற்றையும் செய்து வளர்த்த அப்பெருமையை, நாம் அறிந்தவாறு சொல்லில்.

குறிப்புரை:

வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாம் தெளிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகையா ளுடையாள்.

[ 50]


வெள்ளிமயமாகிய திருக்கயிலாய மலையில் வீற்றிருந்தருளி, பொங்கிடும் பெருந்திரைகளையுடைய கங்கையைச் சூடிய சிவபெருமான் அருளிச் செய்ய, உலகுயிர்களையெல்லாம் அடிமையாகவுடைய அம்மையார் வணங்கி, தெளிந்த உண்மைப் பொருளினைக் கூறும் சிவாகமங்களின் தன்மைகளை எல்லாம் முற்றிலும் தெளிய, அவ்வியல்புகளை உள்ளவாறு கேட்டருளினார்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள்
பெண்ணில் நல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து.

[ 51]


அது பொழுது, எண்ணற்ற ஆகமங்களை மொழிந்தருளிய சிவபெருமான், தாம் விரும்பும் உண்மையாவது தம்மை முறைப்படி வழிபடுவதேயாகும் என்று அம்மையாருக்கு உரைத்தருள, பெண்களுக்கெல்லாம் நல்லவராய அப்பெருமாட்டியாரும், உயிர்கட் கெல்லாம் தலைவராய அப்பெருமானாரை வழிபாடாற்றத் தம் உள்ளத்து விருப்பம் கொண்டார்.

குறிப்புரை: 'ஆகமங்கள் இருபத்தெட்டு எனக் கூறப்பட்டிருக்க, ஈண்டு எண்ணில் ஆகமம் என்றது என்னை' என ஐயம் எழலாம். இதற்கு இருவகையாக அமைதி கண்டுள்ளனர் சிவக்கவிமணியார் (பெ-ரை).
(1) எண் - நில் ஆகமம் எனப் பிரித்து அளவுபடுத்தி நிறுத்தப் பட்ட ஆகமங்கள் எனப் பொருள் உரைத்து, மூல ஆகமங்கள் இருபத் தெட்டும் உபஆகமங்கள் 207உம் ஆகிய இவையாம். (2) மூல ஆகமங்கள் ஒவ்வொன்றும் எண்ணற்ற கிரந்தங்களை உடைய வாதலின் 'எண்ணில் ஆகமம்' என்றார் என்றலும் ஒன்று.

நங்கை உள்நிறை காதலை நோக்கி
நாய கன்திரு வுள்ளத்து  மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலுந் தோன்ற
அடுத்த தென்கொல்நின்  பாலென வினவ
இங்கு நாதநீ மொழிந்தஆ கமத்தின்
இயல்பி னால்உனை அர்ச்சனை புரியப்
பொங்கு கின்றதென் னாசையென் றிறைஞ்சிப்
போக மார்த்தபூண் முலையினாள் போற்ற.

[ 52]


பெருமாட்டியின் திருஉள்ளத்துத் தம்மை வழிபட இருக்கும் காதலின் நிறைவை நோக்கிப், பெருமானாரும் தம் திருவுளத்து மகிழ்ச்சி கொண்டு, அம்மீதூர்வால் வந்திட்ட புன்முறுவல் பூத்திட, 'அம்மையே! நீ செயக் கருதும் செயற்பாடு யாது' எனக் கேட் டருள, அம்மையாரும் அவரை நோக்கி, 'என் தலைவனே! இங்குத் தாங்கள் அருளிய ஆகமத்தின் இயல்பினால் உம்மை வழிபாடு புரிந் திட என் ஆசை மீதூர்கின்றது' எனக் கூறி வணங்கி, போகங்கள் யாவும் நிறைந்தவும், அணிகலன்கள் பலவற்றையுடையதுமான மார்பகங்களையுடைய பிராட்டியும் போற்றுதல் புரிந்துநிற்றலும்.

குறிப்புரை: 'போக மார்த்த பூண் முலையினாள்' (தி. 1 ப. 49 பா. 1) எனவரும் இத் தொடர் ஞானசம்பந்தர், திருநள்ளாற்றுப் பதிகத்தில் எடுத்தாண்டதாகும்.

தேவ தேவனும் அதுதிரு வுள்ளஞ்
செய்து தென்திசை மிக்கசெய் தவத்தால்
யாவ ருந்தனை யடைவது மண்மேல்
என்று முள்ளது காஞ்சிமற் றதனுள்
மாஅ மர்ந்தநம் இருக்கையி லணைந்து
மன்னு பூசனை மகிழ்ந்துசெய் வாயென்
றேவ வெம்பெரு மாட்டியும் பிரியா
விசைவு கொண்டெழுந் தருளுதற் கிசைந்தாள்.

[ 53]


தேவர்களுக்கெல்லாம் தலைவரான பெருமானாரும் அதுகேட்டுத் திருவுள்ளம் பற்றி, 'தென் திசையான தமிழ்நாடு செய்த மிக்க தவத்தால், யாவரும் தம்மிடத்து அடைவதற்கு இடனா யிருப்பதும், இந்நிலவுலகில் என்றும் நிலையாக இருப்பதுமான நகரம் காஞ்சியாகும், மற்று அந்நகரத்தில் மாமர நீழலின் கீழ் அமர்ந்த நம் இருப்பிடத்தினை நீ சேர்ந்து, விளங்கிடும் வழிபாட்டை மகிழ்ந்து செய்திடுவாய்' என்று அங்குச்செல்லுமாறு பணித்தருளினர். எம் பிராட்டியும் எம்பெருமானைப் பிரிய இயலாத நிலையில் விடை கொண்டு காஞ்சிமாநகருக்கு எழுந்தருள இசைந்தனர்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஏத மில்பல யோனிஎண் பத்து
நான்கு நூறாயி ரந்தனுள் வைத்த
பேத மும்புரந் தருளும்அக் கருணைப்
பிரான்மொ ழிந்தஆ கமவழி பேணிப்
போது நீர்மையில் தொழுதனள் போதப்
பொருப்பில் வேந்தனும் விருப்பில்வந் தெய்தி
மாத வம்புரிந் தருளுதற் கமைந்த
வளத்தொ டும்பரி சனங்களை விடுத்தான்.

[ 54]


உயிர்களின்பால் உள்ள மலக் குற்றம் நீங்குதற்கென அவ்வவ்வுயிர்கட்கும் வெவ்வேறாகக் கொடுக்கப் பெற்ற எண்பத்து நான்கு நூறு ஆயிரம் உயிர்வகைகளையும், பாதுகாத்தருளும் பெருங் கருணையுடைய சிவபெருமான் மொழிந்தருளிய ஆகம வழியே அப்பெருமானை வழிபடச் செல்வாராய், அம்மையார் தொழுது போதர, மலையரசனும், விருப்புடன் வந்தடைந்து, அப்பெருமாட்டியார் பெருந்தவம் புரிந்தருளுதற்கு உரிய பொருள்களோடு, வேண்டிய ஏவல் மகளிரையும் உடன் செல விடுத்தான்.

குறிப்புரை: யோனி - பிறப்பு. பரிசனம் - ஏவல்மகளிர்.

துன்னு பல்லுயிர் வானவர் முதலாச்
சூழ்ந்து டன்செலக் காஞ்சியில் அணையத்
தன்னை நேர்வரும் பதுமமா நாகந்
தம்பி ராட்டிதாள் தலைமிசை வைத்தே
அன்னை யாயுல கனைத்தையும் ஈன்றாய்
அடிய னேன்உறை பிலமத னிடையே
மன்னு கோயில்கொண் டருளுவாய் என்ன
மலைம டந்தைமற் றதற்கருள் புரிந்து.

[ 55]


நெருங்கிய பல உயிர்களுள் வானவர் முதலாகப் பலரும் தம்மைச் சூழ்ந்து வர, அப்பெருமாட்டியார் காஞ்சியில் வந்து சேர, ஒப்பற்ற பெருமையுடைய பதுமன் என்னும் பெரிய நாக அரசன் எம்பிராட்டியாரின் திருவடிகளைத் தன் தலைமீது வைத்து வணங்கி, உலகு அனைத்தையும் ஈன்றவளே! அடியேன் உறைகின்ற இப்புற்றி னிடமாகக் கோயில் கொண்டருளுவாய் எனவேண்டலும், மலைஅரசன் மகளாரும் இசைந்தருளி.

குறிப்புரை: திசைக் கொன்றாக எட்டு நாகங்கள் உள்ளன. அவை, வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் என்பன. அவற்றுள் பதுமன் என்பது காஞ்சியின் நிலப்பிரிவில் வாழ்வதாகும்.

Go to top
அங்கு மண்ணுல கத்துயிர் தழைப்ப
அளவில் இன்பத்தின் அருட்கரு விருத்தித்
திங்கள் தங்கிய புரிசடை யார்க்குத்
திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவுந் திருவிளை யாட்டால்
ஏக மாமுதல் எதிர்ப்படா தொழியப்
பொங்கு மாதவஞ் செய்துகாண் பதற்கே
புரிவு செய்தனள் பொன்மலை வல்லி.

[ 56]


அவ்விடத்தில் மண்ணுலகத்துள்ள உயிர்கள் யாவும் தழைத்துச் சிறந்திட, அளவற்ற இன்பத்தினாலாய அருளையே தன் உள்ளத்திற் கொண்டு, அங்கிருந்தே இளம்பிறை தங்கிய சடையை யுடைய பெருமானுக்குத் திருந்திடும் பூசனையை விருப்பமுடன் செய்தருள, அப்பெருமான் கயிலைமலையில் அருளியவாறு அவர் திருவுருவம் இருந்தருளும் இடத்தை, எங்கும் நாடிப் பார்க்கவும், தமது திருவிளையாட்டால், ஒப்பற்றவராக விளங்கும் பெருமானும் எதிர்ப்படாது மறைந்திருப்ப, அருள் பொங்கும் பெருந் தவம் செய்து காண்பதற்கே மனத்தில் விருப்புக் கொண்டனள் பொன்வடிவினதாய இமயமலை தந்த அப்பூங்கொடியாள்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி
நிரந்த ரந்திரு வாக்கினில் நிகழ்வ
தஞ்செ ழுத்துமே யாகஆ ளுடைய
அம்மை செம்மலர்க் கைகுவித் திறைஞ்சித்
தஞ்ச மாகிய அருந்தவம் புரியத்
தரிப்ப ரேஅவள் தனிப்பெருங் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின்மூ லத்தில்
வந்து தோன்றினார் மலைமகள் காண.

[ 57]


அப்பெருமாட்டியின் நெஞ்சம் ஈசனைக் காண்பதையே விரும்ப, திருவாக்கினில் நிகழ்வதும் ஐந்தெழுத்தேயாக, எம்மை ஆளுடைய அம்மையார் செம்மை மிக்க தம்மலர்க் கைகளைக் குவித்து வணங்கி, அவரையன்றி வேறொருவரையும் நாடாத அரிய தவத்தைச் செய்திட, அதுகண்டும் தரித்திருக்க முடியுமோ? அப் பெருமாட்டியின் தனிப்பெருங் கணவரும், உடனே வஞ்சம் நீங்கிய அம் மாமரத்தினடியில் மலைமகளாய உமையம்மை காணத் தோன்றினார்.
குறிப்புரை: மாவின் மூலம் - மாமரத்தின் அடியில்.

கண்ட போதிலப் பெருந்தவப் பயனாம்
கம்பம் மேவிய தம்பெரு மானை
வண்டு லாங்குழற் கற்றைமுன் தாழ
வணங்கி வந்தெழும் ஆசைமுன் பொங்கக்
கொண்ட காதலின் விருப்பள வின்றிக்
குறித்த பூசனை கொள்கைமேற் கொண்டு
தொண்டை யங்கனி வாயுமை நங்கை
தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்.

[ 58]


எம்பிராட்டியார் கண்ட அமையத்துத் தாம் செய்த பெரும் தவப்பயனாக விளங்கும் மாமரத்தின் அடியில் மேவிய தம் பெருமானை, வண்டுகள் உலவும் தம் கூந்தலின் கற்றை முன் தாழத் தாம் வணங்கி, தமது உள்ளத்துப் பெருகி வந்து எழுகின்ற ஆசை பெருக, கண்ட காதலினால் விருப்பம் அளவின்றி மேலாக, தாம் எண்ணிய வழிபாட்டைப் புரிந்திடும் கொள்கையை மேற்கொண்டு கொவ்வைக் கனி அனைய சிவந்த வாயையுடைய அவர் எம்பிரானை, தூயஅருச்சனை புரிந்திடத் தொடங்குதல் செய்வாராய்.

குறிப்புரை: தொண்டையங்கனி - கொவ்வைக்கனி.

உம்பர் நாயகர் பூசனைக் கவர்தாம்
உரைத்த ஆகமத் துண்மையே  தலைநின்
றெம்பி ராட்டிஅர்ச் சனைபுரி வதனுக்
கியல்பில் வாழ்திருச் சேடிய ரான
கொம்ப னார்கள்பூம் பிடகைகொண் டணையக்
குலவு மென்தளி ரடியிணை யொதுங்கி
அம்பி காவன மாந்திரு வனத்தி
லான தூநறும் புதுமலர் கொய்தாள்.

[ 59]


தேவர்களின் தலைவனான சிவபெருமானின் பூசனைக்கு, அவர் தாம் சொன்ன ஆகமத்தின் உண்மையான நெறிப்படி அருச்சனை புரிதலையே தலையாய செயலாகக் கொண்டு, அதனைச் செய்தற்கு, இயல்பாக அப்பெருமாட்டியாருக்குப் பணி செய்து வாழும் திருவுடைய தோழியராய பூங்கொடி போலும் பெண்கள், பூங் கூடையை ஏந்தி உடன் வந்து சேர, எம்பிராட்டியார் விளங்கிடும் மென்மையான தளிர்போன்ற தம் திருவடிகள் ஒதுங்கிட நடந்து சென்று, அம்பிகாவனம் எனும் திருவுடைய நந்தனவனத்தில் சென்றருளி, அங்கு முகையவிழ்ந்து சிறந்திருக்கும் தூய நறுமணமுடைய புதுமலர்களைக் கொய்தாள்.
குறிப்புரை: அம்பிகாவனம் - பெருமாட்டியார் தாமே அமைத்த திருநந்தனவனம் ஆதலின் இப்பெயர் பெற்றது. பூம்படகை - பூங்கூடை.

கொய்த பன்மலர் கம்பைமா நதியில்
குலவு மஞ்சனம் நிலவுமெய்ப் பூச்சு
நெய்த ருங்கொழுந் தூபதீ பங்கள்
நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய்த ரும்படி வேண்டின வெல்லாம்
வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை
எய்த ஆகம விதியெலாம் செய்தாள்
உயிர்கள் யாவையும் ஈன்றவெம் பிராட்டி.

[ 60]


உயிர்கள் யாவையும் ஈன்றவரான உமையம் மையார், தாம் கொய்த பல மலர்களும், கம்பையாற்றில் எடுத்த நீராட்டு நீரும், ஒளிநிலவும் திருமேனிப் பூச்சாகும் சந்தனமும், நெய்விட் டேற்றிய செழுமைமிக்க சுடருடைய விளக்குகளும், நறுமணப் புகைகளும் ஆகிய இவையாவும் நிறைவுடைய சிந்தையில்,நீளப் பெருகிய அன்பினால், அங்கு உண்மையான வழிபாட்டிற்கு வேண்டிய பொருள் எல்லாவற்றையும் எம்பெருமாட்டியார் வேண்டியபோது அவரிடம் எடுத்துத் தோழியர் கொடுத்திட, அது மெய்ம்மையான வழி பாடாக விளங்கிட, ஆகமத்தில் சொல்லியவாறு எம்பிராற்குப் பூசனை செய்துவந்தார்.
குறிப்புரை: மெய்தரும் படி - வழிபாட்டிற்கென அமைத்துக் கொண்ட பொருள்கள்.

Go to top
கரந்த ரும்பயன் இதுவென உணர்ந்து
கம்பம் மேவிய உம்பர்நா யகர்பால்
நிரந்த காதல்செய் உள்ளத்த ளாகி
நீடு நன்மைகள் யாவையும் பெருக
வரந்த ரும்பொரு ளாம்மலை வல்லி
மாறி லாவகை மலர்ந்தபே ரன்பால்
சிரம்ப ணிந்தெழு பூசைநா டோறுந்
திருவு ளங்கொளப் பெருகிய தன்றே.

[ 61]


எம் கைகள் தரும் பயன் இதுவாம் என உணர்ந்து, ஏகம்பம் மேவிய தேவர் தலைவராம் சிவபெருமானிடத்து நிறைந்த காதல் செயும் உள்ளத்தினராகி, அவ்வழிபாட்டின் பயனால் நன்மை கள் யாவும் உலகில் பெருகிட, வரம் தரும் பொருளாய மலையரசன் மகளாம் எம்பிராட்டியார், மாறில்லாதவகை இவ்வாறு தமது உள்ளத்து மலரும் பேரன்பினால் எம்பெருமானைத் தலையால் வணங்கிப் புரிந்திடும் பூசை நாடொறும் எம் ஐயர் திருவுளங் கொள்ளும்படி பெருகியது.
குறிப்புரை:

நாத ரும்பெரு விருப்பொடு நயந்து
நங்கை யர்ச்சனை செய்யுமப் பொழுதில்
காதல் மிக்கதோர் திருவிளை யாட்டில்
கனங்கு ழைக்கருள் புரிந்திட வேண்டி
ஓத மார்கடல் ஏழும்ஒன் றாகி
ஓங்கி வானமும் உட்படப் பரந்து
மீது செல்வது போல்வரக் கம்பை
வெள்ள மாந்திரு உள்ளமுஞ் செய்தார்.

[ 62]


பெருமாட்டியாரின் தலைவரான சிவபெருமானும், அப்பெருமாட்டியாரின் பூசையினைப் பெருவிருப்பத்துடன் மகிழ்வுற ஏற்று வரும்பொழுது, காதல் மிகுந்ததொரு திருவிளையாட்டால், அழகிய குண்டலங்களை அணிந்த அம்மையாருக்கு அருள் புரிந்திட வேண்டி, ஒலி பொருந்திய கடல் ஏழும் ஒன்றாகத் திரண்டு பெருகி ஓங்கி, வான் உலகுகளும் தன்னுள் அடங்கிடுமாறு பரந்து, மேல் செல்வது போன்று பெருகி வரும்படி, கம்பையாற்றை வெள்ளமாகப் பெருகும்படி தமது திருவுள்ளத்து நினைந்தருளினார்.
குறிப்புரை: பால், தயிர், நெய், தேன், கரும்பு, உப்பு, தூயநீர் ஆகியவற்றையுடைய கடல்கள், ஏழு உள என்பர்.

அண்ண லாரருள் வெள்ளத்தை நோக்கி
அங்க யற்கண்ணி தம்பெரு மான்மேல்
விண்ணெ லாங்கொள வரும்பெரு வெள்ளம்
மீது வந்துறும் எனவெருக் கொண்டே
உண்ணி லாவிய பதைப்புறு காதல்
உடன்தி ருக்கையால் தடுக்கநில் லாமை
தண்ணி லாமலர் வேணி யினாரைத்
தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்.

[ 63]


தலைவரான சிவபெருமான், அருளிய அக் கம்பையாற்றின் பெருவெள்ளத்தினை, அழகிய கயல் மீன் போலும் கண்களையுடைய பெருமாட்டியார் நோக்கித், தாம் பூசனை புரிந்தருளும் தம் பெருமான்மேல், வானும் அடங்குமாறு பெருகி வரும் பெருவெள்ளம் வந்து அலைக்கும் என அச்சம் கொண்டு, தம் திருவுள்ளத்து நிலவுகின்ற பதைப்புடைய காதலுடன், தம் திருக்கையால் அவ்வெள்ளத்தைத் தடுத்திடவும், அவ்வெள்ளம் நில்லாமையைக் கண்டு, பின்னர்ச் செயல் வேறின்றி, குளிர்ந்த பிறையினைச் சடையில் உடையாரைத் தம்மையே தமக்கு ஒப்பான பிராட்டியார், இறுகத் தழுவிக் கொண்டார்.
குறிப்புரை:

மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தால்
மாவின் மேவிய தேவநா யகரை
முலைக்கு வட்டொடு வளைக்கையால் நெருக்கி
முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத்த னித்திரு நுதல்திரு முலைக்கும்
செந்தளிர்க் கரங்க ளுக்கும்மெத் தெனவே
கொலைக்க ளிற்றுரி புனைந்ததம் மேனி
குழைந்து காட்டினார் விழைந்தகொள் கையினார்.

[ 64]


மலையரசன் மகளாராகிய பூங்கொடி போன்ற பெருமாட்டியார், தம் திருவுள்ளத்துப் பெருமானார் மீது கொண்ட அன்பு கெழுமிய அச்சத்தால், மாமரத்தின் அடியின் மேவி இருந் தருளும் தேவர் தவைரைத் தம் மார்பகமாகிய மலையோடு வளை யணிந்த கைகளால் இறுகத் தழுவிக் கொள்ளலும், அப்பெருமாட்டி யாரின் அன்பினை விரும்பும் சிவபெருமான் அதுபொழுது வில்லின் வனப்புடைய திருநெற்றியையுடையவரான பெருமாட்டியாரின் திருமுலைக்கும், சிவந்த தளிர்போலும் அப்பெருமாட்டியாரின் திருக்கரங்களுக்கும், மெத்தென்று இருக்குமாறு, கொலை செயும் யானைத் தோல் போர்த்த தமது திருமேனியைக் குழைந்து காட்டினார்.
குறிப்புரை: ஏகாரம் தேற்றப் பொருளது.

கம்பர் காதலி தழுவமெய் குழையக்
கண்டு நிற்பவுஞ் சரிப்பவு மான
உம்ப ரேமுதல் யோனிக ளெல்லாம்
உயிரும் யாக்கையும் உருகியொன் றாகி
எம்பி ராட்டிக்கு மெல்லிய ரானார்
என்றும் ஏகம்பர் என்றெடுத் தேத்த
வம்பு லாமலர் நிறையவிண் பொழியக்
கம்பை யாறுமுன் வணங்கிய தன்றே.

[ 65]


தம் காதலியார் தம்மைத் தழுவிட, ஏகம்பர் தமது திருமேனி குழைந்திடக் கண்டபோது, நிற்பனவும் இயங்குவனவும் ஆகிய தேவர்கள் முதலாக உள்ள எழுவகைத் தோற்றத்து எண்பத்து நான்கு நூறாயிரம் வகைப்பட்ட உயிர்கள் எல்லாம், தம் உயிரும் உடலும் உருகி ஒன்றாகி எம்பெருமாட்டியாருக்கு என்றும் மெல்லிய ரானார் எம்பெருமான் என்று எடுத்து மொழிந்து போற்றிட, நறுமணம் பொருந்திய மலர்களை வானம் பொழிந்திட, அது பொழுது கம்பை யாறும் வணங்கித் தன் வெள்ளம் தணிந்தது.
குறிப்புரை: வம்பு - நறுமணம்.

Go to top
பூதி யாகிய புனிதநீ றாடிப்
பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து
காதில் வெண்குழை கண்டிகை தாழக்
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனா ராயுமா தவஞ்செய்
அவ்வ ரங்கொலோ அகிலம்ஈன் றளித்த
மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு
வளைத்த ழும்புடன் முலைச்சுவ டணிந்தார்.

[ 66]


சிறந்த செல்வமாகிய தூய நீற்றினை அணிந்து, பொங்கிடும் கங்கை ததும்பும் முடியையுடைய சடையை அணிந்து, திருக்காதில் வெண்தோடும் திருமார்பில் உருத்திராக்கமாகிய கண்டி கையும் தாழ அணிந்து, தாம் அருளுடன் கலந்த யோகத்தில் பொருந்திய திருவுள்ளம் உடையராக, அவர் தோற்றமில் காலத் தவராக நின்றாலும், பெருமாட்டியாரின் பெருந்தவத்தால் ஆய வரம் தானோ பிறிதோ அறியோம்; உலகம் யாவற்றையும் உளவாக்கிய அம்மையார் தம் உடலின் பயனைக் கொடுப்பவே அதனைக் கொண்டு, அப் பெருமாட்டியாரின் அடையாளங்களாகிய வளைத் தழும்புடன் முலைச் சுவடும் அணிந்து கொண்டார் பெருமான்.
குறிப்புரை: மெய்ப்பயன் - தழுவிக்கொள்ளுதல்

கோதி லாஅமு தனையவள் முலைக்குக்
குழைந்த தம்மண வாளநற் கோலம்
மாது வாழவே காட்டிமுன் நின்று
வரங்கள் வேண்டுவ கொள்கஎன் றருள
வேத காரண ராயஏ கம்பர்
விரைம லர்ச்செய்ய தாமரைக் கழற்கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்த
தின்மை தானறி விப்பதற் கிறைஞ்சி.

[ 67]


குற்றத்தை நீக்கும் அமுது அனைய அம்மையாரின் முலைக்குக் குழைந்திட்ட தமது மணவாளக் கோலத்தினை, எம் பெருமாட்டியார் வாழ்ந்திட முன்னின்று காட்டி, அம்மையே! 'உனக்கு வேண்டிய வரங்களைக் கொள்க' என்று அருள் செய்திடலும், அதுபொழுது எம் பெருமாட்டியாரும், குற்றம் நீங்கிய பூசனை இன்னமும் நிறைவு பெறாமையால், விண்ணப்பிப்பதற்காக, நான் மறைகளுக்கும் மூலகாரணராய பெருமானாரின், நறுமணம் கமழும் செவ்விய திருவடிக் கீழ், வணங்கி.
குறிப்புரை:

அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும்
அளவி னால்அஞ்சி அஞ்சலி கூப்பிக்
கொண்ட இற்றையென் பூசனை யின்னும்
குறைநி ரம்பிடக் கொள்கஎன் றருள
வண்டு வார்குழல் மலைமகள் கமல
வதனம் நோக்கிஅம் மலர்க்கண்நெற் றியின்மேல்
முண்ட நீற்றர்நின் பூசனை யென்றும்
முடிவ தில்லைநம் பாலென மொழிய.

[ 68]


தேவர்கட்கெல்லாம் தேவனான பெருமானாரின் எதிர் நின்று கூறுகின்ற அத்தன்மைக்கு அஞ்சி, இருகைகளையும் கூப்பி, எம்பிரானே! இன்று கொண்ட என்னுடைய இப்பூசனையில், இன்னும் எஞ்சிய பகுதியையும் நிறைவாகச் செய்தற்கு அருள்செய வேண்டும் என வேண்டியருளலும், வண்டுகள் சூழ்ந்த கூந்தலை யுடைய மலையரசன் மகளாரின் தாமரை போலும் வனப்புடைய திருமுகத்தைப் பார்த்து, அழகிய மலரனைய கண்களையுடைய நெற்றி யின்மேல் மூன்று குறியாக நீறணிந்த எம்பெருமான், 'நம்பால் உனது பூசனை என்றும் முடிவதில்லை' என்று அருள் செய்திடலும்,
குறிப்புரை:

மாறி லாதஇப் பூசனை யென்றும்
மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண் டருளி
ஈறி லாதஇப் பதியினு ளெல்லா
அறமும் யான்செய அருள்செய வேண்டும்
வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல்
ஒழிய இங்குளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன்கொடுத் தருளப்
பெறவும் வேண்டும்என் றனள்பிறப் பொழிப்பாள்.

[ 69]


அதுகேட்ட அன்னையாரும், ஐயனை நோக்கி, 'மாறு ஏதும் இல்லாத இப்பூசனை என்றும் இங்கு விளங்கிட எம்பிரான் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டருளி, முடிவிலாத இப்பதியினுள் இருந்து எல்லா அறங்களையும் யான் செய்திட, திருவருள் செய்திடல் வேண்டும்; இத்திருப்பதியிலுள்ளார் திருவடிக்குப் பிழை செயும் ஒன்றினை ஒழிய, வேறு பிற தீங்குகள் செய்யினும், அச் செயல்கட் குரிய பேறாக மாபெருந் தவத்தின் பயனைக் கொடுத் தருளவும் வேண்டும்' எனப் பிறப்பறுக்கும் பெருஞ் செல்வியராகிய பெருமாட்டி யார் கேட்டருளினார்.
குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே
இடைய றாஅறம் வளர்க்கும்வித் தாக
இகப ரத்திரு நாழிநெல் லளித்துக்
கடைய ராகியும் உயர்ந்தவ ராயுங்
காஞ்சி வாழ்பவர் தாஞ்செய்தீ வினையுந்
தடைப டாதுமெய்ந் நெறியடை வதற்காம்
தவங்க ளாகவும் உவந்தருள் செய்தார்.

[ 70]


ஆனேற்றின் மீது எழுந்தருளி வரும் மேலாய பெருமானை மலைமகளார் இவ்வாறு வேண்டுதலும், அப்பெரு மாட்டியார் விரும்பியவாறு பூசனையை ஏற்றிடப் பொருந்தி அவ் விடத்தில் வீற்றிருந்தருளி, அம்மையாருக்கு இடையறாது அறத்தை வளர்த்திடும் வித்தாக, இம்மை மறுமை ஆகிய இரண்டிற்கும் ஏதுவாக இருநாழி நெல்லைக் கொடுத்தருளி, கடையவராயினும் உயர்ந்தவரா யினும் காஞ்சியில் வாழ்பவர்கள் தாங்கள் செய்கின்ற தீய வினை களும், தடையின்றி மெய்ந்நெறியை அடைதற்காய தவங்களாகப் பயன் கொள்ளுமாறும் உவந்து அருள் புரிந்தார்.
குறிப்புரை: உயிர்களின் இம்மைக்கு ஒரு நாழியும், மறுமைக்கு ஒரு நாழியுமாக இரு நாழி நெல் வழங்கப்பட்டது. உயர்ந்தவர் - சாதி, குலம், கல்வி, செல்வம் முதலியவற்றால் உயர்ந்தவர்.

Go to top
எண்ண ரும்பெரு வரங்கள்முன் பெற்றங்
கெம்பி ராட்டிதம் பிரான்மகிழ்ந் தருள
மண்ணின் மேல்வழி பாடுசெய் தருளி
மனைய றம்பெருக் குங்கரு ணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்
புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப்
பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்.

[ 71]


இவ்வாறு எண்ணற்ற பெரு வரங்களைப் பெற்று, அங்கு எம்பெருமாட்டியார் தம் பெருமான் மகிழ்ந்து அருளிட, இம்மண்ணின் மேல் அவரை அங்கு வழிபாடு செய்தருளி, இல்லறம் இனிது பெருக, கருணையினால் உலகில் தோற்றும் உயிர்கள் யாவும் பெருக உற்ற காதலினால், நீடி நிலைத்திருக்கும் தம் வாழ்க்கையைப் புண்ணியம் நிறைந்த திருக்காமக்கோட்டம் என்னும் கோயிலில் மேற்கொண்டருளிப் பொலிந்திட, அங்கிருந்து தம் முப்பத்திரண்டு அறங்களையும் நிகழ்த்தி ஆண்டருளுவாளாயினள்.

குறிப்புரை: திருக்காமக் கோட்டம் - காமாட்சியம்மையார் வீற்றிருந் தருளும் திருக்கோவில். அம்மையார் இறைவரைத் தாம் விரும்பி வழி பட்ட இடமாதலின் இப் பெயர் பெற்றது. இனி அம்மையார் உயிர்கள் மீது வைத்த கருணையால் அங்கு எழுந்தருளி முப்பத்திரண்டு அறங்களையும் பேணி வளர்த்தமையால் அப்பெயர் பெற்றது என்றலும் ஒன்று. இக்கோயில் நீங்கலாகக் காஞ்சியிலுள்ள சிவ பெருமான், திருக்கோவில்கள் எவற்றிலும் அம்மையாருக்கெனத் தனிக்கோவில் இல்லை என்பதும் குறிக்கத்தக்கதாகும் .
காஞ்சி காமாட்சி அம்மையார் இறைவர் வழங்கிய இருநாழி நெல் கொண்டு வளர்த்த முப்பத்திரண்டு அறங்கள்:
1. துன்புற்றோர்க்கு உணவும் உறையுளும் வழங்கும் சாலை.
2. கற்பவர்க்குணவு
3. அறுசமயத்தார்க்கு உண்டி
4. பசுவிற்கு வாயுறை
5. சிறைச் சோறு
6. ஐயம்
7. தின் பண்டம் நல்கல்
8. பற்றுக்கோடற்றவருக்குச் சோறு
9. மகப்பேறு அற்றோர் சிவபுண்ணியப் பேற்றிற்கு ஆளாதல்
10. மகவு வளர்த்தல்
11. மகவுக்குப் பால் வார்த்தல்
12. பற்றுக்கோடற்றார்க்கு இறுதிக் கடன் செய்தல்
13. பற்றுக்கோடற்றார்க்கு ஆடை வழங்குதல்
14. சுண்ணம் வழங்குதல்
15. நோய்க்கு மருந்து.
16. வண்ணார்க்கு உதவல்
17. நாவிதர் உதவி
18. கண்ணாடி வழங்கல்
19. காதோலை நல்கல்
20. கண்மருந்து கொடுத்தல்
21. தலைக்கெண்ணெய் வழங்கல்
22. பெண் போகம் நுகர்தற்காம் சூழலை வழங்கல்
23. பிறர்துயர் காத்தல்
24. தண்ணீர்ப்பந்தல் அமைத்தல்
25. மடம் அமைத்தல்
26. குளம் தோண்டல்
27. சோலைகளை உண்டாக்கல்
28. ஆவுராய்ஞ்சு தறி அமைத்தல்
29. விலங்கிற் குணவு தருதல்
30. ஏறு விடுத்தல்.
31. விலை கொடுத்து உயிர் காத்தல்
32. மகட் கொடை.

அலகில் நீள்தவத் தறப்பெருஞ் செல்வி
அண்ட மாந்திரு மனைக்கிடுந் தீபம்
உலகில் வந்துறு பயனறி விக்க
ஓங்கும் நாண்மலர் மூன்றுட னொன்று
நிலவ ஆண்டினுக் கொருமுறை செய்யும்
நீடு தொன்மையால் நிறைந்தபே ருலகம்
மலர்பெ ருந்திருக் காமக்கோட் டத்து
வைத்த நல்லறம் மன்னவே மன்னும்.

[ 72]


அளவிலாது நீடிய தவத்தினைச் செய்யும் அறப் பெருஞ்செல்வியாராகிய அம்மையார், அண்டமாகிய தமது திரு மனைக்கு ஏற்றுகின்ற விளக்குகளான முச்சுடர்களுமே, அம்மையார் உலகில் வந்த பயனை அறிவித்தற்கு வந்தாற் போல, பண்டு தொட்டே சிறந்த புதிய ஒருதண்டினில் மலரும் நீல மலர்கள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை மலர நிகழ்ந்துவரும் இச்செயலினால், இப்பேருலகெலாம் ஒளிதரும் திருக்காமக்கோட்டத்தில் நிலவும் நல்லறங்கள் பலவும் விளங்க வீற்றிருந்தருளுவர்.
குறிப்புரை:

தீங்கு தீர்க்குநல் தீர்த்தங்கள் போற்றுஞ்
சிறப்பி னால்திருக் காமக்கோட் டத்தின்
பாங்கு மூன்றுல கத்தினுள் ளோரும்
பரவு தீர்த்தமாம் பைம்புனற் கேணி
வாங்கு தெண்டிரை வேலைமே கலைசூழ்
வைய கந்தனக் கெய்திய படியாய்
ஓங்கு தன்வடி வாய்நிகழ்ந் தென்றும்
உள்ள தொன்றுல காணியென் றுளதால்.

[ 73]


உயிர்களிடத்துள்ள தீங்கினைத் தீர்த்திடும் நல்ல புண்ணிய நீர்நிலைகள் பலவும் (தீர்த்தங்கள்) போற்றிடுகின்ற சிறப் பினால், திருவுடைய காமக்கோட்டத்தின் அருகில், மேல் நடு கீழ் ஆகிய மூவுலகத்துளாரும் வணங்கிடும் சிறப்புடைய பசிய நீர் நிறைந் துள்ள கேணியாக, தெள்ளிய திரைகளை உடைய கடலை ஆடையாக அணிந்த இந்நிலவுலகில் வாழ்வார் வீடு பேறடைதற்கு ஏணி போன்று விளங்கும் சிறப்பால் ஓங்கி அருளுடைய நீர் வடிவாய் என்றும் நிகழ்ந் திருக்கும் ஒரு நீர்நிலை, உலகாணி என்னும் பெயருடன் விளங்குவதாகும்.
குறிப்புரை: 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' (குறள், 1032) என்பர் வள்ளுவர். அதுபோல இந்நீர்நிலை உயிர்கட்கு ஆணியாக விளங்குகின் றது. ஆல் - அசைநிலை.

அந்த மின்றிநல் லறம்புரிந் தளிக்கும்
அம்மை தன்திருக் காமக்கோட் டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது
வழிக்கொ ளாததன் மருங்குபோ தலினால்
சந்த மாதிர மயங்கியெம் மருங்குஞ்
சாயை மாறிய தன்றிசை மயக்கம்
இந்த மாநிலத் தவரெலாங் காண
என்றும் உள்ளதொன் றின்றுமங் குளதால்.

[ 74]


நல்ல அறங்கள் பலவற்றையும் எல்லையின்றிச் செய்து உலகினைக் காத்து வரும் எம் அம்மைவாழும் திருக்காமக் கோட்டத்தில், ஞாயிறும் திங்களும் மேலாக வழிக்கொண்டு சென்றி டாது காமக்கோட்டத்தின் அருகாகப் போதலினால், நேரான திக்குகள் மாறுபட்டு, அதனால், எப்பக்கங்களிலும் நிழல்கள் மாறி இருக்கும் திசை மயக்கம், இந்தப் பெரிய நிலவுலகில் உள்ளார் எல்லோரும் காணும் படி என்றும் உள்ளது. இன்றும் அங்கு உள்ளது.
குறிப்புரை: சந்த மாதிரம் - அழகிய வடதிசை முதலாக நான்கு திசைகள். திசை மயக்கம் - திசை தெரியாது மயங்கும் மயக்கம்.

கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில்
காஞ்சி யாந்திரு நதிக்கரை மருங்கு
சென்னி யிற்பிறை யணிந்தவர் விரும்பும்
திருப்பெ ரும்பெய ரிருக்கையில் திகழ்ந்து
மன்னு வெங்கதிர் மீதெழும் போதும்
மறித்து மேல்கடல் தலைவிழும் போதும்
தன்னி ழற்பிரி யாதவண் காஞ்சித்
தானம் மேவிய மேன்மையும் உடைத்தால்.

[ 75]


காளியின் நன்மையமைந்த காப்புடைய அக்காஞ்சி நகர எல்லையில், காஞ்சி என்னும் ஆற்றின் அருகில், சடைமுடியின்கண் பிறையணிந்த இறைவன் விரும்பி வீற்றிருக்கும் திருப்பெரும்பெயர் இருக்கை என்னும் கோயிலில், பொருந்திய வெப்பமான கதிர்களை உடைய ஞாயிறு, மேலெழும்பொழுதும் மீளத் திரைக்கடலில் வீழ்ந்திடும் பொழுதும், தன் நிழல்தன்னை விட்டுப் பிரியாத காஞ்சி என்னும் மரம் நிலைபெற்றிருக்கும் இடச் சிறப்பு உடையது காஞ்சி மாநகரம் ஆகும்.

குறிப்புரை: கன்னி - காளி. இறைவர் ஒரு காலத்தில் உமையம்மை யாரைக் காளி என்று அழைத்தனர். அதனைப் பொறாத அம்மையார் இறைவரை வழிபட்டு அக் காளி வடிவத்தினின்றும் நீங்கினர் என்பது வரலாறு. அவ்வாறு அவ்வடிவினின்றும் நீங்குங்கால், அதனின்றும் ஒருபெண் தோன்றி அம்மையாரை வணங்கித் தன்னைப் பணிகொள வேண்டினள். அம்மையாரும் அவள் வேண்டுகோளுக்கு இரங்கிச் 'சும்பன், நிசும்பன் ஆகிய இரு அவுணர்களையும் அழித்துக் கவுசிகி எனும் பெயர் பூண்டு, காஞ்சி மாநகரைக் காவல் புரிந்து வருக' எனப் பணித்தனர். இன்றும் அவள் காவல் செய்கின்றாள் என்பர். இதனால் காஞ்சி மாநகருக்குக் 'கன்னி காப்பு' எனும் பெயரும் உளதாயிற்று.
திருப்பெரும் பெயர் இருக்கை - இது கோவிலின் பெயர். பெரும் பெயர் - மகாவாக்கியம். இவ்வாக்கியத்தினால் பேசப்பட்ட கடவுள் சிவபெருமானாராதலின் அவர் எழுந்தருளியிருக்கும் கோவி லைத் திருப்பெரும் பெயர் இருக்கை என்றனர். 'பெரும்பெயர் இயவுள்'(தி. 11 திருமுருகா. வரி 274) எனத் திருமுருகாற்றுப்படை யும்,'பெரும் பெயர்க் கடவுளிற் கண்டு' எனச் சிவஞானபோதமும் (பாயிரம், வரி 4) குறித்தல் காண்க. காஞ்சித் தானம் - காஞ்சி என்னும் மரமுடைய இடம்.

Go to top
மறைக ளால்துதித் தருந்தவம் புரிந்து
மாறி லாநிய மந்தலை நின்று
முறைமை யால்வரும் பூசனை செய்ய
முனிவர் வானவர் முதலுயி ரெல்லாம்
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய
நீடு காமங்கள் அவரவர்க் கருளி
இறைவர் தாமகிழ்ந் தருளிய தளிகள்
எண்ணி றந்தஅத் திருநக ரெல்லை.

[ 76]


மறைகளால் போற்றப்பெற்று, அரிய தவம் புரிந்து, மாறிலாத நியமங்களின் தலைநின்று, ஆகமநெறிப்படி வழிபாடு புரிந் திடற்கு முனிவர்கள் தேவர்கள் முதலான உயிர்கள் அனைத்தும், நிறை கின்ற அன்பினால் எம்பெருமானைப் போற்றல் புரிந்திட, அவர்கள் மனத்தில் வேண்டிய வேண்டியாங்கு எய்த, அருள் புரிந்து, பெருமான் மகிழ்ந்தருளும் திருக்கோயில்கள் பலவும், அக்காஞ்சி நகரின் எல்லை யுள் எண்ணிறந்தனவாய் உள்ளன.

குறிப்புரை: அபிராமீசம், ஆதிபதீசம், இரணீசம், இரேணுகீச்சரம், ஓணகாந்தன்தளி, கச்சபேசம், கச்சிமேற்றளி, கண்ணீசம், சலந்தரீசம், சித்தீசம், சுரகரீசம், தக்கேசம், நவக்கிரகீசம், நாரசிங்கீசம், பணாதரீச்சரம், பராசரேசம், பரசுராமீசம், பலபத்திரராமீசம், பாண்டவீசம், மக்கீசம், மணிகண்டேச்சரம், முத்தீசம், வயிரவீசம், வாணீசம், விடுவச்சேனீசம், வீரராகேவீசம், முதலான கோவில்கள் பல உள்ளன. இவையனைத் தும் வழிபட்டோரின் பெயர்களை நிலைக்களனாகக் கொண்டு விளங்குகின்றன.

மன்னு கின்றஅத் திருநகர் வரைப்பில்
மண்ணில் மிக்கதோர் நன்மையி னாலே
துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயல்முன்
துரக்க வெய்திய தொலைவில்ஊக் கத்தால்
தன்னி லத்துநின் றகற்றுதல் செய்யும்
தான மன்றியும் தனுவெழுந் தரணி
எந்நி லத்தினுங் காண்பரும் இறவாத்
தானமென் றிவைஇ யல்பினில் உடைத்தால்.

[ 77]


நிலைபெற்ற அக்காஞ்சித் திருநகர் எல்லையில், இம்மண்ணில் மிக்கதோர் நன்மையினால் விளங்கிடும் பேற்றால், நெருங்கிக் கொலை புரியும் யானையைத் தூற்றில் வாழும் ஒரு முயல், தன் ஊக்கத்தால் அவ்யானையை ஓடிடச் செய்த இடமும், இறந்த உடம் புகள் மீளவும் உயிர் பெற்று எழுகின்ற ஓர் இடமும், எந்நிலத்திலும் காண்டற்கரிய இறவாத்தானம் என்ற இடமும் உள்ளன.
குறிப்புரை:

ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
இன்ப மேதரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டி னார்தமக் கிட்டசித் தியதாய்
விளங்கு தீர்த்தம்நன் மங்கல தீர்த்தம்
நீண்ட காப்புடைத் தீர்த்தம்மூன் றுலகில்
நிகழ்ந்த சாருவ தீர்த்தமும் முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண் ணிலவும்
அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்.

[ 78]


தம்முடன் தொடருகின்ற தீவினையாவற்றையும் நீக்கி, இன்பமே தருகின்ற புண்ணிய நீர்நிலையும், வேண்டுநர் வேண்டியாங்கு எய்துதற்குரிய புண்ணிய நீர்நிலையும், நன்மையைத் தரும் மங்கல நீர்நிலையும், தேவர்களின் காவல்மிக்க நீர்நிலையும், மூவுலகிலும் உள்ள புண்ணிய நீர்நிலைகள் எல்லாம் ஒருங்கு கூடிய புண்ணிய நீர் நிலையும், முதலாக உள்ள அவ்விடத்து நீண்ட பெருஞ் சிறப்புடையனவாய எண்ணற்ற நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் தேவர்கள் நாளும் நீராடுதலை ஒழியார்.
குறிப்புரை:

தாள தொன்றினில் மூன்றுபூ மலரும்
தமனி யச்செழுந் தாமரைத் தடமும்
நீள வார்புனல் குடதிசை யோடி
நீர்க ரக்குமா நதியுடன் நீடு
நாள லர்ந்துசெங் குவளைபைங் கமலம்
நண்ப கல்தரும் பாடலம் அன்றிக்
காள மேகம்ஒப் பாள்உறை வரைப்பிற்
கண்ப டாதகா யாப்புளி உளதால்.

[ 79]


தண்டு ஒன்றில் மூன்றுமலர்கள் மலரும் பொன் னிறமாய செழுமை மிக்க தாமரைக் குளமும், நீண்ட பெருக்குடைய நீர் மேற்குப் புறமாக ஓடிப் பின் மறைந்து போகும் பேராறும், அதனுடன் நெடுகவும் பகலில் மலரும் செங்குவளை மலரும், இரவில் மலரும் தாமரையும், நண்பகலில் மலரும் பாதிரியும், இவையன்றிக் கருமேகம் போலும் நீலநிறமுடைய பெருமாட்டியார் எழுந்தருளியிருக்கும் எல்லையில், இரவில் உறங்காத காயாத புளிய மரமும் உள்ளன.
குறிப்புரை: பகலில் தாமரையும், இரவில் குவளையும், மாலையில் பாதிரியும் மலர்வதே இயற்கை. மாறாக இருப்பன இந்நிலத்தமைந்த வியத்தகு செயல்களாம். கண்படாத புளி - உறங்காத புளி. இரவில் இம்மரத்தின் இலைகள் குவிவதில்லை ஆதலின் இங்ஙனம் கூறினார். காயாப்புளி - காய்த்தல் இலாத புளி. காய்த்தல் இல்லை ஆகவே பழமும் இன்று, விதையும் இன்று, என்பதும் பெறுதும். எனவே மீள முளைத்தலும் இன்று என்பது புலனாகும். கோவை மாவட்டத்தில் உள்ள திருப்பேரூரில் பிறவாப்புளி என்பது ஒன்று உண்டு என அப்புராணம் கூறுவதும் நினைவு கூர்தற்குரியது.

சாயை முன்பிணிக் கும்கிண றொன்று
தஞ்சம் உண்ணில்நஞ் சாம்தடமொன்று
மாயை யின்றிவந் துள்ளடைந் தார்கள்
வான ரத்துரு வாம்பிலம் ஒன்று
மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும்
விளங்கு பொய்கையும் ஒன்றுவிண் ணவரோ
டாய இன்பம்உய்க் கும்பிலம் ஒன்றோ
டனைய ஆகிய அதிசயம் பலவால்.

[ 80]


தன்னுள் மூழ்கினோரது உருவ நிழலை வெளித் தோன்றாதவாறு மறைக்கும் கிணறு ஒன்றும், சிறிது நீர் உண்டாலும் நஞ்சாகும் நீர் உடைய குளம் ஒன்றும், ஒரு வஞ்சமும் இன்றித் தன்னுள் புகினும் குரங்கு வடிவாகும் ஆழ்கிணறு ஒன்றும், பொருந்திய அக்குரங்கு வடிவம் நீங்கக் குளித்தற்குரிய பொய்கை ஒன்றும், தேவர்களோடு கூட்டி இன்பம் நுகரச் செய்யும் ஆழ்கிணறு ஒன்றும் ஆக இத்தகைய வியத்தகு குளங்கள் பலஉள்ளன.

குறிப்புரை: 'தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே' (தொல். இடை. 18) என்னும் தொல்காப்பியம் ஈண்டு அச் சொல் சிறிது என்னும் பொருட்டாய நின்றது.
பிலம் - ஆழமான நீர்நிலை.

Go to top
அஞ்சு வான்கரத் தாறிழி மதத்தோர்
ஆனை நிற்கவும் அரையிருள் திரியும்
மஞ்சு நீள்வது போலுமா மேனி
மலர்ப்ப தங்களில் வண்சிலம் பொலிப்ப
நஞ்சு பில்கெயிற் றரவவெற் றரையின்
நாம மூன்றிலைப் படையுடைப் பிள்ளை
எஞ்ச லின்றிமுன் திரியவுங் குன்றம்
எறிந்த வேலவன் காக்கவும் இசையும்.

[ 81]


அருளுடைய ஐந்து கைகளும், ஆறு போல் பாயும் மதமும், ஆனைமுகமுமுடைய மூத்த பிள்ளையார் நின்று காக்கவும், நள்ளிருளில், மலர்போலும் திருவடிகளில் சிலம்புகள் ஒலித்திடத் திரிகின்ற மேகம் போலும் நீண்ட பெரும் திருமேனியையும், நஞ்சு வரும் பற்களை உடைய நாகத்தை யணிந்த வெற்றுத் திருவரையை யும் உடைய சூலப்படையை ஏந்திய பிள்ளையாகிய வைரவக்கடவுள் ஓய்வின்றிக் காக்கவும், கிரவுஞ்ச மலையைப் பிளவுபடுத்திய வேற் படையுடைய பிள்ளையார் (முருகன்) காக்கவும், காஞ்சி நகரம் பேறுற்றுச் சிறந்துள்ளது.

குறிப்புரை:

சத்தி தற்பர சித்தயோ கிகளும்
சாத கத்தனித் தலைவ ரும் முதலா
நித்தம் எய்திய ஆயுள்மெய்த் தவர்கள்
நீடு வாழ்திருப் பாடியும் அனேகஞ்
சித்தர் விஞ்சையர் இயக்கர்கந் தருவர்
திகழ்ந்து மன்னுவார் செண்டுகை யேந்தி
வித்த கக்கரி மேல்கொளுங் காரி
மேவு செண்டணை வெளியுமொன் றுளதால்.

[ 82]


சத்தியாய பெருமாட்டியை மனத்தகத்து ஒருமைப் பட எண்ணி, அதனால் பல பேறுகளையடைந்த யோகிகளும், சிவ பரம்பொருளை இவ்வகையில் எண்ணிப் பேறுபேற்ற சிவயோகிகள் முதலாக உள்ள தவத்தவர்களும், அழிவற்று, நிலமிசை நீடுவாழும் இருக்கைகளும் பல உள்ளன. சித்தர்கள், விஞ்சையர்கள், இயக்கர்கள், கந்தருவர்கள் மகிழ்வுடன் தங்கிடச், செண்டினைத் திருக்கரத்து ஏந்தி வித்தகமுடைய வெள்ளை யானை மீது எழுந்தருளி உலா வரும் ஐய னார் வந்து சேரும் செண்டணை வெளி என்பதோர் இடமும் அக் காஞ்சியில் உளது.

குறிப்புரை: தற்பரசித்தி - உயிர்கட்குத் தலைவியாராகிய இறை வியார். சிவசத்தியே பரம்பொருள் எனக் கொண்டு வழிபடுவாரின் மதம் சுத்தசாத்த மதமாகும். செண்டு அணை வெளி - யானை, குதிரைகளை நடத்தும் வெளி. மதுரையில் இத்தகைய வீதியை வெளி வீதி என்பர். இமயம் வரை சென்று தன் கொடியைப் பொறித்து மீள நினைந்த கரிகாற் பெருவளத்தான், இக்காரிக் கடவுளை வழிபட்டு இச் செண்டினைப் பெற்றான் என்பர். நித்தம் எய்திய ஆயுள் மெய்த்தவர் கள் - மந்திரம், மருந்து, யோகம் முதலியவற்றால் உடலை வலிதாக்கி நீடுவாழும் நிலைபெற்றவர்கள்.

வந்த டைந்தவர் தம்முரு மாய
மற்று ளாரைத்தாங் காண்பிட முளது
சிந்தை யோகத்து முனிவர்யோ கினிகள்
சேரும் யோகபீ டமும்உள தென்றும்
அந்த மில்அறம் புரப்பவள் கோயில்
ஆன போகபீ டமும்உள தாகும்
எந்தை யார்மகிழ் காஞ்சிநீ டெல்லை
எல்லை யில்லன உள்ளஆ ரறிவார்.

[ 83]


அப்பெருநகரில் தன்னிடத்து வந்து அடைந்தவ ரின் உருவம் மற்றவருக்குத் தோற்றாது, மற்றையோரைத் தாம் காணத் தெரியப் பண்ணும் இடம் ஒன்றுளது. சிந்தையில் சிவமே தெளிகின்ற யோக வாழ்வுடைய முனிவர்களும், யோகினிகளாய பெண்களும் சேரும் யோக பீடமும் அங்கு உளது. எல்லையற்ற அறங்களை என்றும் புரிந்து காப்பவராய பிராட்டியார் வாழும் போகபீடமும் அங்கு உளதாகும். எந்தை பெருமானாகிய ஏகம்பர் மகிழ்ந்து வீற் றிருக்கும் காஞ்சியம்பதியில் அத்தகைய வியத்தகு செயல்கள் புரியும் இடங்கள் பலவும் உள்ளன. இவற்றை முழுமையாக யார் அறிவர்? ஒருவரும் இலர் என்பது கருத்து.

குறிப்புரை: யோகினிகள் - யோகர் என்பதற்குரிய பெண்பால். அறம் வளர்க்கும் பெருமாட்டியாராக இருத்தலின், அன்னையார் இருந்த இடத்தைப் போகபீடம் என்றார். போகபீடம் - திருக்காமக் கோட்டம்.
'போகியா யிருந் துயிர்க்குப் போகத்தைப் புரித லோரார்' (சிவஞா. சித்தியார் - சூ. 1 பா. 50) எனவரும் திருவாக்கை நினைவு கூரலாம்.

தூண்டு சோதியொன் றெழுந்திருள் துரக்கும்
சுரர்கள் வந்துசூழ் உருத்திர சோலை
வேண்டி னார்கள்தம் பிறப்பினை யொழிக்கும்
மெய்ந்நெ றிக்கண்நின் றார்கள்தாம் விரும்பித்
தீண்டில் யாவையுஞ் செம்பொனாக் குவதோர்
சிலையும் உண்டுரை செய்வதற் கரிதால்
ஆண்ட நாயகி சமயங்க ளாறும்
அகில யோனியும் அளிக்கும்அந் நகரம்.

[ 84]


விளங்குகின்ற ஓர் ஒளிப்பிழம்பானது இரவில் தோன்றி இருளை நீக்குதற்கு இடனாகவும், தேவர்கள் வந்து சூழ்வுறுதற்கு ஏதுவாகவும் உள்ள உருத்திர சோலையென்னும் பூங்கா வனமும், வேண்டுநர்களுடைய பிறவிப் பிணியைப் போக்க வல்ல அருள் வலிமையுடைய மெய்ஞ்ஞானியர்கள் வந்து விரும்பித் தீண்டி னால் அவர் தீண்டிய அப்பொருள் யாவற்றையும் செம்மையான பொன்னாக்குவதோர் கற்சிலையும் அங்கு உண்டு. இத்தகைய சிறப் புடன் எம்மை ஆட்கொள்ளும் காமாட்சி அம்மையார் வீற்றிருந்து ஆறு சமயங்களையும் அனைத்துயிர்களையும் பாதுகாத்தருளும் அக்காஞ்சி நகரம் உளது.

குறிப்புரை:

என்றும் உள்ளவிந் நகர்கலி யுகத்தில்
இலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன்
வன்றி றற்புலி இமயமால் வரைமேல்
வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை
சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்
திருந்து காதநான் குட்பட வகுத்துக்
குன்று போலுமா மதில்புடை போக்கிக்
குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்.

[ 85]


என்றும் அழிவின்றி உள்ள இக்காஞ்சிநகரமா னது கலியுகத்தில், ஒளி பொருந்திய வேல் ஏந்திய கரிகாற் பெருவளத் தான் என்னும் பெருவளமுடைய சோழ அரசன், திக்கெலாம் வெற்றி கொண்டு உலகினை ஒரு குடைக்கீழ் ஆண்டிட, வன்மையாய திறல் உடைய புலிக்கொடியை இமயம் என்னும் பெருமலை மேல் நாட்டச் செல்பவன், தனக்கு இக்காஞ்சி நகரின் வளச் சிறப்பை முன் அங்குச் சென்று கண்ட வேடன் ஒருவன் சொல்லிட, அது கேட்ட அரசன், உடன் அங்குச் சென்று காடாக இருந்த இப்பகுதியைத் திருத்தி, நான்கு காத அளவிலான ஒரு நகரையமைத்து, அதனைச்சூழ மலை போலும் உயர்ந்த பெரு மதிலையும் அமைத்து, அங்கு மக்களைக் குடியிருத்திய சிறந்த கொள்கையால் பெருமை மிக விளங்குவது காஞ்சிநகரம் ஆகும்.

குறிப்புரை: பாண்டியன் மதுரைத் திருநகரம் கண்டமையை இங்கு நினைவு கூரலாம்.
சிலப்பதிகாரம், இந்திரவிழாக் காதை, வரி 95-98, அடி யார்க்கு நல்லார் எழுதிய உரையும் காண்க.

Go to top
தண்காஞ்சி மென்சினைப்பூங் கொம்ப ராடல்
சார்ந்தசைய அதன்மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண்காஞ்சி இசைபாடும் பழன வேலிப்
பணைமருதம் புடையுடைத்தாய்ப் பாரில் நீடும்
திண்காஞ்சி நகர்நொச்சி இஞ்சி சூழ்ந்த
செழுங்கிடங்கு திருமறைக ள் ஒலிக்குந் தெய்வ
வண்காஞ்சி அல்குல்மலை வல்லி காக்க
வளர்கருணைக் கடலுலகஞ் சூழ்ந்தால் மானும்.

[ 86]


குளிர்ந்த காஞ்சி மரத்தின் மெல்லிய கிளைமேல், பூங்கொத்துக்களையுடைய அக்கொம்புகளைக் காற்று அசைத்திட, அதன் அருகில் தேன்உண்ணும் வண்டினங்கள் காஞ்சிப் பண்ணின் இசையை முரல்கின்ற மாஞ்சோலையை வேலியாக உடைய அகன்ற வயல்நிலத்தை அருகில் உடையதாய், இந்நிலவுலகில் நீடிய இயல் புடைய திண்மை மிக்க காஞ்சி நகரின் வலியால் மிகுந்த புறமதி லினைச் சூழும் செழுமை மிக்க அகழியானது, சிறந்த நான்மறைகளும் ஒலித் திடும் தெய்வத் தன்மையுடைய காஞ்சி என்னும் மேகலையை அணிந்த அல்குலையுடைய மலையரசன் மகளார் உலகினைக் காத்திடற்கு, அவர்பால் வளர்கின்ற கருணைக்கடல் உலகினைச் சூழ்ந்திருப்பது போல் விளங்கும்.

குறிப்புரை: அம்மையாரின் கருணைப் பெருக்கெனச் சூழ்ந்த அகழி அமைந்துள்ளது என்பது கருத்து.

கொந்தலர்பூங் குழல்இமயக் கொம்பு கம்பர்
கொள்ளும்பூ சனைகுறித்த தானங் காக்க
மந்திரமா மதிலகழி அவர்தாந் தந்த
வாய்மைஆ கமவிதியின் வகுப்புப் போலும்
அந்தமில்சீர்க் காஞ்சியைவந் தடைந்தார்க் கன்றி
அடைகளங்கம் அறுப்பரிதென் றறிந்து சூழ
வந்தணைந்து தன்கறுப்பும் உவர்ப்பும் நீக்கும்
மாகடலும் போலுமலர்க் கிடங்கு மாதோ.

[ 87]


நல்ல மலர்கள் நிரம்ப உள்ள இவ்வகழியானது, கொத்தாக அலர்ந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய இமயத்தின் பூங்கொடி போலும் சாயலை உடைய அம்மையார், ஏகம்பர் ஏற்றருளுகின்ற வழிபாட்டைப் புரிந்திடும் இவ்விடத்தைக் (காஞ்சியை) காத்திட, அப்பெருமான் உலகுய்ய மொழிந்த உண்மையாய ஆகமத்தின் நெறிப்படி அமைக்கப் பெற்ற மந்திர வடிவாய மதிலைச் சூழ்ந்த அகழியைப் போன்றது. அதுவன்றி எல்லையற்ற சீர்மையையுடைய காஞ்சியை வந்து அடைந்தார்க் கல்லது, தங்களிடத்து அடைகின்ற குற்றங்களை அறுத்தல் அரிது என்று அறிந்து இக்காஞ்சியைச் சூழவந்து அணைந்து, தனது கருமை நிறத்தையும் உப்புத் தன்மையையும் நீக்கிக் கொள்ளும் பெருங்கடலை யும் ஒத்திருக்கும்.

குறிப்புரை: சிவவழிபாடு ஆற்றுவார் செயத்தக்க ஐவகைத் தூய்மை களுள், இடத் தூய்மை (தான சுத்தி) என்பதும் ஒன்றாகும். வழிபாடு ஆற்றும் இடத்திற்கு வரும் இடையூறுகளைப் போக்கி, நான்கு மூலை களிலும் தீயொளியுடன் விளங்கும் மும்மதில்களும், அவற்றைச் சூழ மூவகழிகளும் உண்டாக்கி, சத்தியாகிய காவலை மேலும் கீழும் உளவாக்கி, இவ்வாறு எல்லா வகையான காவலும் பொருந்தச் செய்து கொள்ளுதல் இடத் தூய்மையாகும். காஞ்சியைச் சூழ்ந்த அகழியும், மதிலும் அந்நகரைக் காக்க அமைந்தனவே எனினும், ஆசிரியர் சேக்கிழார் தம் பத்திமை மீதூர்வால் தற்குறிப்பேற்றமாக அம்மதிலும், அகழியும் அமைந்தவை, அம்மையார் தாம் வழிபாடு ஆற்றுதற்கென அமைத்துக் கொண்ட வழிபாட்டு இடத்திற்குக் (பூசைத் தானம்) காவலாக ஆகம விதிப்படி அமைத்துக் கொண்ட அகழியும் மதிலும் போன்றனவாம் எனக் குறிக்கின்றார். பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய இடங்களுள் இதுவும் ஒன்று.
திருவாயில்

ஆங்குவளர் எயிலினுடன் விளங்கும் வாயில்
அப்பதியில் வாழ்பெரியோர் உள்ளம் போல
ஓங்குநிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய
உமைபாகர் அருள்செய்த ஒழுக்க மல்லால்
தீங்குநெறி அடையாத தடையு மாகிச்
செந்நெறிக்கண் நிகழ்வாய்மை திருந்து மார்க்கம்
தாங்குலவ நிலவிவளர் ஒளியா லென்றும்
தடநெடுவான் அளப்பனவாந் தகைய வாகும்.

[ 88]


அவ்விடத்துக் காஞ்சியில் மதிலுடன் விளங்கு கின்ற வாயில்கள், அப்பதியில் வாழ்கின்ற பெரியோர்களது உள்ளம் போல் உயர்ந்து ஓங்கியும், நிலைத்தும் இருப்பனவாய், உலகம் உய்ய அம்மையப்பராகிய பெருமான் அருளிச் செய்திட்ட நல்லொழுக்கம் அல்லாது, தீங்கு நெறிகள் அடையாத தடையுமாகிச், செம்மை நெறி யுடன் விளங்கும் ஆகமநெறிகள் நிலவ, வளர்கின்ற ஒளியினால் வானினை அளக்கும் தன்மையும் வாய்ந்தவையாகும்.

குறிப்புரை: 'அருளுடையார் உளம் அனைய தண்ணளித்தாய்' (தி. 12 பு. 25 பா. 5) என அப்பூதியடிகளாரின் தண்ணீர்ப்பந்தரைப் பின்னும் குறிப்பிடுவர்.

மாறுபெறல் அருங்கனக மாடம் நீடு
மணிமறுகும் நெடுந்தெருவும் வளத்தில் வந்த
ஆறுபயில் ஆவணவீ திகளும் மற்றும்
அமைந்தநகர் அணிவரைகள் நடுவு போக்கிக்
கூறுபடு நவகண்ட மன்றி மல்கக்
கொண்டஅனே கங்கண்ட மாகி யன்ன
வேறொருமண் ணுலகுதனில் உளதாம் என்ன
விளங்கியமா லோகநிலை மேவிற் றன்றே.

[ 89]


ஈடு இணையற்ற பொன்னாலான மாடங்களை இரு புறமும் கொண்ட அழகிய வீதிகளும், நெடிய தெருக்களும், பல்லாற்றானும் வந்த வளங்கள் மிக்க கடை வீதிகளும், மற்றும் அந் நகரின் அமைப்பு, அழகிய மலைகளை நடுவே கொண்டு, பல கூறாக விளங்கிடும் ஒன்பது கண்டங்களே அல்லாமல், அவை போல் பல கண்டங்களாகி விளங்க, அக்காஞ்சி வேறொரு மண்ணுலகு இதனில் உளதாம் என்ன விளங்கிய பெரியதோர் உலகம் போல் விளங்கியது.

குறிப்புரை: ஒன்பான் கண்டங்கள் - பரத கண்டம், கிம்புரு கண்டம், அரிவருட கண்டம், இளாவிரத கண்டம், இரமிய கண்டம், இரணிய கண்டம், குரு கண்டம், கேதுமால கண்டம், பத்தாரசுவ கண்டம் என்பன. கோள்கள் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு கண்டமாக வகுத்துக் கூறல் மரபு. கண்டங்களைப் பிரிப்பன மலைகளேயாம். அவை போலக் காஞ்சியைப் பிரிப்பன உயர்ந்த மாடங்களைக் கொண்ட வீதிகளாகும். அவற்றைச் சூழ இருப்பன, உலகிலுள்ள ஒன்பான் கண்டங்களேயன்றி, மேலும் பல கண்டங்களும் சூழ அமைந்திருப்பன போல்வதாம். மாலோகம் - மேல் உள்ள ஏழுலகங் களில் ஒன்று எனினும் அமையும். அன்று , ஏ என்பன அசைநிலை.

பாகமருங் கிருபுடையும் உயர்ந்து நீண்ட
படரொளிமா ளிகைநிரைகள் பயில்மென் கூந்தல்
தோகையர்தங் குழாமலையத் தூக்கு முத்தின்
சுடர்க்கோவைக் குளிர்நீர்மை துதைந்த வீதி
மாகமிடை யொளிதழைப்ப மன்னி நீடு
மருங்குதா ரகைஅலைய வரம்பில் வண்ண
மேகமிடை கிழித்தொழுகுந் தெய்வக் கங்கை
மேல்நதிகள் பலமண்மேல் விளங்கி ஓங்கும்.

[ 90]


வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள உயர்ந்த நீண்ட ஒளி வீசும் மாளிகையின் வரிசைகளில் பயிலும் மிருதுவான கூந்தலையுடைய பெண்களின் கூட்டங்கள், ஓடி ஆடி நடந்து திரிதலினால், அவர்களது மார்பில் தொங்கவிடப்பெற்ற முத்து மாலைகளின் குளிர்ச்சியாய ஒளி வீசும் வீதிகள், வானத்தின் மீது ஒளிதழைத்திட விளங்கி, நீள நிலவிய அயற் புறங்களில் உள்ள விண்மீன்கள் அலைவுற, அளவில்லாத வண்ணமுடைய மேகங்கள் இடையாகக் கிழித்துக் கொண்டு இந்நிலவுலகில் ஓடும் தெய்வ நதியாய கங்கை முதலிய வானின் மேல் உள்ள ஆறுகள் பலவும் இந்நிலவுலகில் திரண்டு விளங்குவதை ஒத்திருக்கும்.

குறிப்புரை: மாளிகை ஒளி - விண் ஒளி தழைப்ப நிற்பது: பெண் களின் கூந்தல் அலைவு - மேகங்கள் அலைவு: முத்தின் கோவை - விண்மீன்களின் கோவை: குளிர்ந்த தன்மை துதைந்த வீதி - கிழித்து வரும் தெய்வ கங்கை முதலிய நதிகள் இந்நிலவுலகில் பலவாக விளங்குவன.

Go to top
கிளரொளிச்செங் கனகமயந் தானாய் மாடு
கீழ்நிலையோர் நீலச்சோ பானம் பூணக்
கொளவமைத்து மீதொருபாற் கன்ன சாலை
குலவயிரத் தாலமைத்த கொள்கை யாலே
அளவில்சுடர்ப் பிழம்பானார் தம்மைத் தேடி
அகழ்ந்தேனம் ஆனானும் அன்ன மாகி
வளர்விசும்பில் எழுந்தானும் போல நீடும்
மாளிகைகள் உளமற்ற மறுகு தோறும்.

[ 91]


வீதிகள் தோறும் விளங்குகின்ற சில மாடங்கள் ஒளியுடைய செம்பொன்னின் மயமாய்ச் செய்யப்பட்டு, அருகி லுள்ள கீழ் நிலையில் நீல மணிகளினால் ஆய படிகளையுடையவாய், மேல்நிலையில் ஒரு பக்கத்தில் வயிரமணிகளால் அமைந்த சாளரத் தைக் கொண்டிருப்பன, அளவற்ற ஒளிப்பிழம்பாகி நின்றருளும் சிவபெருமானின் திருவடியையும், திருமுடியையும் தேடிக் காண்டற்கு முற்பட்ட பன்றி வடிவான திருமாலும், அன்ன வடிவான அயனும் போல்வனவாய் உள்ளன.
குறிப்புரை: மாடங்கள் செம்பொன் மயமாய் இருப்பன சிவபெரு மானையும், அவற்றின் கீழுள்ள நீல நிறமுடைய படிகள் திருமாலை யும், அவற்றின் மேல் நிலையிலுள்ள வயிரவொளி நிலவும் சாளரம் அயனையும் ஒத்துள்ளன. சோபானம் - படிகள்.

மின்பொலிபன் மணிமிடைந்த தவள மாட
மிசைப்பயில்சந் திரகாந்தம் விசும்பின் மீது
பொன்புரையுஞ் செக்கர்நிறப் பொழுது தோன்றும்
புனிற்றுமதி கண்டுருகிப் பொழிந்த நீரால்
வன்புலியி னுரியாடைத் திருவே கம்பர்
வளர்சடையும் இளம்பிறையுங் கண்டு கும்பிட்
டன்புருகி மெய்பொழியக் கண்ணீர் வாரும்
அடியவரும் அனையவுள அலகி லாத.

[ 92]


ஒளி விளங்கும் பல மணிகள் நெருங்கிய வெள்ளிய மாடங்கள் மேலாக விளங்கிடும் சந்திர காந்தக் கற்கள், வானத்தின் மீது பொன்னை ஒத்த செக்கர் நிறமான மாலைப் பொழுதில் தோன்றிடும் இளம்பிறையைக் கண்டு உருகிச் சொரிந்திருக்கும் நீர்மை, வலிய புலியின் தோலை ஆடையாக உடைய திரு ஏகம்பப் பெருமானின் வளர்கின்ற சடையையும் இளம்பிறையையும் கண்டு, கும்பிட்டு, அன்பு உருகி மேனியில் வடிந்திடக் கண்ணீர் சொரிந்திடும் அடியவரை ஒத்திருப்பனவாய் உள்ளன.
குறிப்புரை: வெண்மையான மாடங்கள் திருநீறணிந்த அடியவர் கள். சந்திரகாந்தக்கல் - அவ்வடியவரின் கண்கள். செக்கர்வானமும் பிறையும் - இறைவனின் திருச்சடையும், அதன் கண் விளங்கிடும் பிறையும். சந்திரகாந்தக் கற்கள் நீர் பொழிதல்-அடியவர்கள் இறைவ னைக் கண்டு கண் நீர் பொழிதல்.

முகிலுரிஞ்சுங் கொடிதொடுத்த முடிய வாகும்
முழுப்பளிங்கின் மாளிகைக்கள் முற்றுஞ் சுற்றும்
நிகரில்சரா சரங்களெல்லாம் நிழலி னாலே
நிறைதலினால் நிறைதவஞ்செய் இமயப் பாவை
நகிலுழுத சுவடும்வளைத் தழும்பும் பூண்ட
நாயகனார் நான்முகற்குப் படைக்க நல்கும்
அகிலயோ னிகளெல்லாம் அமைத்து வைத்த
அரும்பெரும்பண் டாரநிலை யனைய வாகும்.

[ 93]


மேகங்கள் உராய்கின்ற கொடிகள் நாட்டிய சிகரங் களை உடையவான பளிங்கினால் ஆகிய மாளிகைகள் முற்றும், அவற் றைச் சுற்றி இருக்கும் நிகரற்ற சிறப்புடைய இயங்குவனவும் நிற்பனவு மாகிய உயிர்த் தொகைகளின் நிழல் படுவதால், அம்மாளிகைகள் நிறைகின்ற தவம் செய்திடும் மலையரசன் மகளாரான காமாட்சி அம்மையாருடைய முலைபதிந்த சுவடும் வளையல்களின் தழும்பும் பூண்ட தலைவனார், நான்கு முகங்களையுடைய அயனது படைப்புத் தொழிலைப் புரிந்திடற்குக் கொடுத்திடும் உயிர்வகைகள் எல்லாவற் றையும் சேர அமைத்து வைத்த அரிய பெருங் கருவூலத்தின் சேமிப் புகள் போன்று விளங்குவன.
குறிப்புரை: பளிங்குக் கண்ணாடியால் நிலைபெறச் செய்த மாளிகை களில் அவற்றைச் சூழ இருந்திடும் பொருள்கள் பலவும் தெரிதலால், அவை, ஏகம்பர் அயனாருக்குப் படைப்பினைச் செய்தற்கென ஆக்கி வைத்த முன்னோடியான படைப்பைப் போன்றுள்ளன.

பொற்களப மாளிகைமேல் முன்றில் நின்று
பூங்கழங்கும் மணிப்பந்தும் போற்றி யாடும்
விற்புருவக் கொடிமடவார் கலன்கள் சிந்தி
விழுவனவும் கெழுவுதுணை மேவு மாதர்
அற்புமுதிர் கலவியினிற் பரிந்து சிந்தும்
அணிமணிச்சே டியர்தொகுக்கும் அவையு மாகி
நற்கனக மழையன்றிக் காஞ்சி யெல்லை
நவமணிமா ரியும்பொழியும் நாளும் நாளும்.

[ 94]


பொன்னால் செய்து கலவைச் சாந்தால் மெழுகிய மாளிகைகளின் மேன் முற்றத்தில் நின்று, பூங்கழங்குகளையும் மணிப் பந்துகளையும் இறைவனின் பொருள் சேர் புகழைப் போற்றி ஆடு கின்ற வில்போலும் அழகிய புருவமுடைய பூங்கொடி போன்ற பெண்கள், தம் பொன்னின் அணிகலன்கள் விளையாட்டின் விரை வால் சிந்தப்பெற்று விழுவனவும், தம் உயிர்த் துணையான கணவ ருடன் அன்பு முதிர்வால் கொண்ட கலவியினில் அன்பின் விளைவால் சிந்திடுகின்ற அழகிய மணிகளைத் தோழியர் எடுத்து மீளவும் தொகுத் திடும் மணிகளுமாகி இவ்வகையால் அங்கு நல்ல பொன் மழையே பொழிவதன்றிக் காஞ்சி நகர எல்லையில் நவரத்தினங்களின் மழையும் நாளும் பொழியும்.
குறிப்புரை: மேல் மாடத்தில் தோழியர்களுடன் ஆடும் விளை யாட்டானும், தம்புலவியானும் கழன்று சிந்திடும் பொன் அணிகளும், மணிகளும் கீழ் வீழ்தல், பொன் மழையும் மணி மழையும் போல்வன வாயின.

பூமகளுக் குறையுளெனுந் தகைய வான
பொன்மாடத் தரமியங்கள் பொலிய நின்று
மாமகரக் குழைமகளிர் மைந்தர் அங்கண்
வந்தேறு முன்நறுநீர் வண்ட லாடத்
தூமணிப்பொன் புனைநாளத் துருத்தி வீசும்
சுடர்விடுசெங் குங்குமநீர்த் துவலை தோய்ந்த
காமர்மணி நாசிகையின் மருங்கு தங்கும்
கருமுகில்கள் செம்முகில்க ளாகிக் காட்டும்.

[ 95]


திருமகளுக்கு உறைவிடம் எனும் தகவுடையதான பொன்னாலாய மாடங்களின் மேல், நிலாமுற்றத்தில் பொலிவுற நின்று, பெரிய மகர குண்டலங்களை அணிந்த பெண்கள், அங்குத் தங்கள் கணவர் வந்து ஏறிடு முன்னர், அவர்மேல் நறிய வாசனையுடைய நீரைச் சொரிந்து வண்டல் என்னும் விளையாடல் புரிதற்காக, அவர்கள் கையில் கொண்ட தூய மணியும் பொன்னும் சேரப்புனைந்து செய்த உள் துளைகளையுடைய நீர்தாவும் துருத்தியினின்றும் வீசும் ஒளியையுடைய செங்குங்கும நீரின் துளிகள் தோய்ந்துள்ள, அம் மாளிகைகளின் அழகிய மணிகள் பதித்த நாசிகைகளின் அருகில் தங்கும் கருமேகங்கள், சிவந்த மேகங்களாகித் தோன்றும்.
குறிப்புரை: நாசிகை - மாடங்கள் மேல், மூக்குப் போல் அமைந்த நீண்ட பகுதிகள். இதனால் உள்ளிடம் காற்று இயக்கத்திற்கு ஏதுவாகும். நாளம் - துருத்தி. மகளிர் தம் கணவர் மீது சொரிதற்கென வைத்திருந்த செங்குங்கும நீர், ஆங்காங்குச் சிந்திக்கிடப்ப, அந்நீர் மேல் படிந்த மேகங்கள் செந்நிறம் உடையனவாய்க் காட்டின.

Go to top
இமமலிய வெடுத்தநெடு வரைகள் போல
இலங்குசுதைத் தவளமா ளிகைநீள் கோட்டுச்
சிமையடையுஞ் சோபான நிரையும் விண்ணும்
தெரிவரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து
தமர்களுடன் இழிந்தேறு மைந்தர் மாதர்
தங்களையும் விசும்பிடைநின் றிழியா நிற்கும்
அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வே
றறிவரிதாந் தகைமையன அனேகம் அங்கண்.

[ 96]


பனி மூடுமாறு உயர்ந்து நீண்ட மலைகளைப் போல் விளங்குகின்ற சுண்ணச் சாந்து பூசிய வெள்ளிய மாளிகைகளின் நீண்ட சிகரங்களின் உச்சியை அடைவதற்காக அமைந்த படிகளின் நிரையையும், வானுலகினையும் வேறாகப் பிரித்து அறிய முடியாத வாறு உள்ள தூய்மையினால், அப்படிக்கட்டினில் இருந்து தம் சுற்றத் தவர்களுடன் இறங்கி ஏறும் ஆண்களையும் பெண்களையும், வானில் நின்றும் இழிந்து இந்நிலவுலகில் வருகின்ற தேவர்களையும் தேவப் பெண்களையும் பிரித்து அறிதற்கு அரிதாக, மாளிகைகள் பல அமைந் துள்ளன.
குறிப்புரை: இமம் - பனி. இடப்பொலிவானும், அவ்விடத்து இயங் கும் ஆடவர், மகளிர் தோற்றப் பொலிவாலும், தேவர் இவர், மண்ணுல கத்தவர் இவர் என வேறுபிரித்தறிய இயலாதவாறு மாடங்கள் உள.

அரவநெடுந் தேர்வீதி அருகு மாடத்
தணிமணிக்கோ புரத்தயலே வியல்வாய் நீண்ட
விரவுமர கதச்சோதி வேதித் திண்ணை
விளிம்பினொளி துளும்பமுறைப் படிமீ தேறுங்
குரவமரும் குழல்மடவா ரடியி லூட்டும்
குழம்படுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம்
பரவைநெடுந் தரங்கமிசை விளங்கித் தோன்றும்
பவளநறுந் தளிரனைய பலவும் பாங்கர்.

[ 97]


ஒலி நிரம்பிய நெடுந்தேர்கள் ஓடிடும் வீதியின் அருகில் விளங்கும் மாடத்தில், மணிகள் பதித்த கோபுரத்தின் அயலே அகன்று நீண்டு விளக்கமுறும் பச்சை நிற ஒளிபரப்பிடும் மரகதத் தினாலான திண்ணைகளின் விளிம்பில், ஒளியமைந்த படிகள் மீது முறையாக மேலேறுகின்ற குரவமலர்களைச் சூடிய கூந்தலையுடைய பெண்கள், தம் காலில் பூசிய செம்பஞ்சுக் குழம்பின் சுவடுகள் பதித்த கோலமானது, கருநெடுங்கடலின் மீது விளங்கித் தோன்றும் பவளக் கொடியின் வாசனையுடைய தளிர்களைப் போன்று விளங்குகின்றன.
குறிப்புரை: வியல்வாய் - அகன்ற இடம். 'வியலென் கிளவி அக லப் பொருட்டே' (தொல். சொல். உரி. 66) என்னும் தொல்காப்பியமும். திண்ணைகளின் மரகத ஒளி படிகளில் வீச, அவை கடல் நிறமானது. அப்படிகளில் ஏறிய பெண்களின் அடிச்சுவடுகளின் செம்பஞ்சுக் குழம்பினால் அவை பவளக் கொடிகளின் தளிர் போல்வன ஆயின.

வெம்புசினக் களிற்றதிர்வும் மாவின் ஆர்ப்பும்
வியனெடுந்தேர்க் காலிசைப்பும் விழவ றாத
அம்பொன்மணி வீதிகளில் அரங்கி லாடும்
அரிவையர்நூ புரஒலியோ டமையும் இம்பர்
உம்பரின்இந் திரன்களிற்றின் முழக்குந் தெய்வ
உயர்இரவி மாக்கலிப்பும் அயனூர் தித்தேர்
பம்பிசையும் விமானத்துள் ஆடுந் தெய்வப்
பாவையர்நூ புரஅரவத் துடனே பல்கும்.

[ 98]


சினம் மிகுந்த யானைகளின் அதிர்வும், குதிரை களின் கனைப்பும், அகன்ற பெரும் தேர் உருள்களின் (சக்கரங்கள்) ஓசையும், விழாக்கோலம் நீங்காத அழகிய பொன் வீதிகளில் அமைந்துள்ள நாட்டிய மேடைகளில் ஆடுகின்ற பெண்களுடைய சிலம்போசையுடன் இந்நகரம் இங்கு அமைந்திருக்கும். வானுலகி லுள்ள தேவேந்திரனது ஐராவத யானையின் ஓசையும், தெய்வத் தன்மை வாய்ந்த ஞாயிற்றினது தேரிற்பூட்டிய குதிரைகளின் கனைப் பும், நான்முகனது ஊர்தியாகிய தேர் உருளையின் ஓசையும், தேவ விமானங்கள் மீதுநின்று ஆடுகின்ற தெய்வப் பெண்களுடைய சிலம் பின் ஓசையுடன் இந்நகரின் மேலுள்ள தேவலோகம் விளங்கி நிற்கும்.
குறிப்புரை: காஞ்சியில் யானை, குதிரை, தேர் ஆகியவற்றின் ஒலிகளுடன், நாட்டிய மேடையில் காணும் சிலம்போசையும் இணைந்து ஒலிக்கின்றன. இவை இம்பரில் (இவ்வுலகில்) கேட்பன. இவற்றுடன் உம்பரில் (தேவலோகத்தில்) இந்திரனின் ஐராவத ஓசையும், கதிரவனின் குதிரை ஒலியும், அயனது தேர் உருளின் ஓசையும், தேவப் பெண்கள் நடன மாடுங்கால் ஏற்பட்ட சிலம்போசை யுடன் கூடி ஒலிக்கின்றன. இவ்வாற்றான் காஞ்சியும் விண்ணுலகும் ஒலிவகையானும் ஒப்ப விளங்குமாற்றை அறியலாம்.

அருமறைஅந் தணர்மன்னும் இருக்கை யான
ஆகுதியின் புகையடுத்த அம்பொன் மாடப்
பெருமறுகு தொறும்வேள்விச் சாலை யெங்கும்
பெறுமவிப்பா கங்கொடுக்கும் பெற்றி மேலோர்
வருமுறைமை அழைத்துவிடு மந்திரம்எம் மருங்கும்
வானவர்நா யகர்திருவே கம்பர் முன்றில்
திருமலிபொற் கோபுரத்து நெருங்கும் எல்லாத்
தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும்.

[ 99]


அரிய மறைகளை ஓதிடும் அந்தணர்கள் வாழும் இருப்பிடங்களாய, வேள்விப்புகை பரந்திடும் அழகிய பொன் மாடங் கள் நிறைந்த பெருவீதிகள் தோறும், வேள்விச் சாலைகளில் எங்கும் தேவர்கள் பெறத்தகும் அவிர்பாகத்தைக் கொடுத்திடும் தகுதியை உடைய பெரியோர்கள், அவ்வத் தேவரையும் அங்கு வருமாறு முறை மையாக அழைத்திடச் சொல்லப்படும் மந்திரங்கள், எப்பக்கங்களிலும் சென்று, தேவர் தலைவரான ஏகம்பப் பெருமானின் திருமுற்றத்தில் திருமலிந்த பொற்கோபுரத்து வாய்தலில், நெருங்கி இருக்கின்ற எல்லாத் தேவரையும் தம் பக்கமாக உள்ள வேள்விச் சாலைக்கு அழைத்துக் கொண்டு செல்லும்.

குறிப்புரை: வழிபடுதற்கும் திருத்தொண்டு செய்தற்குமாகத் திருக்கோயிலின் திருமுன்பு இருக்கும் தேவர்களில், உரியவர்களை வேள்விச் சாலையில் ஒலிக்கக் காணும் மந்திரங்கள் அழைத்துச் செல்லும். வேள்வியில் இடப்படும் உணவு அவி எனப்படும். அவ் வுணவு அவ்வத் தேவருக்கும் பகிர்ந்து கொடுக்கப் பெறுதலின் அவிர்ப்பாகம் எனப்படும
இது முதலாக வரும் மூன்று பாடல்களும் கூறியது கூறலும், யாப்பு அமைதி கெட்டிருப்பதும், சொல்வழக்குச் சிறப் பின்மையும் கொண்டு வெள்ளிப் பாடல்களாக இருக்கலாம் எனச் சிவக்கவிமணி யார் (பெரிய. பு. உரை) கருதுவர்.

அரசர்குலப் பெருந்தெருவும் தெற்றி முற்றத்
தாயுதங்கள் பயிலும்வியல் இடமு மங்கண்
புரசைமதக் கரிகளொடு புரவி யேறும்
பொற்புடைய வீதிகளும் பொலிய வெங்கும்
விரைசெய்நறுந் தொடையலங்கல் குமரர் செய்யும்
வியப்புறுசெய் தொழில்கண்டு விஞ்சை விண்ணோர்
நிரைசெறியும் விமானவூர் திகளின் மேலும்
நிலமிசையும் பலமுறையும் நிரந்து நீங்கார்.

[ 100]


அரச மரபினர்கள் வாழும் பெரிய வீதிகளிலும் சித்திர கூடங்களிலுள்ள முற்றங்களில் போர்க் கருவிகளைப் பயிலும் பெரிய இடங்களிலும், அவ்விடத்துக் கயிற்றையுடைய மதயானை களையும் குதிரைகளையும் ஏறி நடாத்தும் பொற்புடைய வீதிகளிலும், பிறவிடங்களிலும் பொலிவுமிகுமாறு, அழகு பொருந்திய வாசனை யுடைய இனிய மலர் மாலைகளையும், மணி மாலைகளையும் சூடிய அரசிளங் குமரர்கள் செய்திடும் வியக்கத்தக்க படைத் தொழில்களைக் கண்டு, விஞ்சையர்களும் வானோர்களும் நிரையாக வந்து தாம் ஊர்ந்து வரும் விமானங்களின் மேலும், ஊர்திகளின் மேலும் நிலத்திலும் பல முறையும் நின்று வியப்புடன் நோக்கியவர்களாய்க் கூடி நீங்காது நிற்பர்.
குறிப்புரை: தெற்றி - சித்திர கூடங்கள். புரசை - யானையின் கழுத்தில் கட்டப்படும் கயிறு.

Go to top
வெயிலுமிழும் பன்மணிப்பூண் வணிக மாக்கள்
விரவுநிதி வளம்பெருக்கும் வெறுக்கை மிக்க
வயினிலவு மணிக்கடைமா நகர்கள் எல்லாம்
வனப்புடைய பொருட்குலங்கள் மலிதலாலே
கயிலைமலை யார்கச்சி ஆலயங்கள் பலவுங்
கம்பமுமே வியதன்மை கண்டு போற்றப்
பயிலுமுருப் பலகொண்டு நிதிக்கோன் தங்கப்
பயில்அளகா புரிவகுத்த பரிசு காட்டும்.

[ 101]


ஒளிமிகுந்த பல மணிகளால் விளங்கிய அணி கலன்களை அணிந்த வணிகமக்கள், தம்பால் பொருந்திய செல்வங் களின் வளத்தினைப் பெருக்கும் செல்வம் மிகுந்த இடங்கள் மிக்க, மணிகள் பதித்த முதல் வாயிலையுடைய மாளிகைகள் எல்லாம், வனப் புடைய பொன் மணி முதலாய பொருட் குவியல்கள் விளங்கி மலிந் திருப்பதால், அவை, திருக்கயிலாய மலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், காஞ்சியில் உள்ள பல திருக்கோவில்களிலும் ஏகம் பத்திலும் வீற்றிருக்கும் தன்மையைக் கண்டு, நிதியின் தலைவனான குபேரன், தான் அங்கு வந்து தங்குவதற்காக, தனது அளகாபுரி எனும் உலகைக் காஞ்சியில் பல வடிவில் வணிகர் வீதியில் வகுத்து வைத்தான் எனும் தன்மையைக் காட்டுவன.

குறிப்புரை: வெயில் - ஒளி. வெறுக்கை - செல்வம்.

விழவுமலி திருக்காஞ்சி வரைப்பின் வேளாண்
விழுக்குடிமைப் பெருஞ்செல்வர் விளங்கும் வேணி
மழஇளவெண் திங்கள்புனை கம்பர் செம்பொன்
மலைவல்லிக் களித்தவள ருணவின் மூலந்
தொழவுலகு பெறுமவள்தான் அருளப் பெற்றுத்
தொன்னிலத்து மன்னுபயிர் வேத வாய்மை
உழவுதொழி லாற்பெருக்கி உயிர்க ளெல்லாம்
ஓங்கவருந் தருமவினைக் குளரால் என்றும்.

[ 102]


திருவிழாக்கள் எந்நாளும் மலிந்த திருவுடைய காஞ்சியம்பதியின் எல்லையில், வேளாளர்கள் எனப்படும் உயர்ந்த குடியில் தோன்றிய பெருஞ் செல்வர்கள், விளங்கிடும் சடையில் இள வெண் திங்களைச் சூடிய ஏகம்பர், செம்பொன் வடிவான இமய மலையில் தோன்றிய அம்மையாருக்குக் கொடுத்தருளிய இரு நாழி நெல்லையும் அப்பெருமாட்டியைத் தொழுதலினால் உவந்து தம்மிடம் கொடுத்தருள, அதனை வித்தாகக் கொண்டு, பழமையாக நீடித்த உலகத்து விளங்கிய பயிர்களை, மறைகளால் சிறப்பிக்கப்பெறும் உழவின் தொழிலாற் பெருகச் செய்து, உயிர்கட்கெல்லாம் உணவு கொடுத்துப் பேணிவரும் அறச்செயலுக்கு என்றும் உரியவர்களாவர்.

குறிப்புரை: தருமவினை - வேளாண்மை. ஆல் அசைநிலை. பெரு மாட்டியார் இறைவரிடம் பெற்ற இரு நாழி நெல்லையும், அப்பெரு மாட்டியின் அருளால், தாம் பெற்றவர்கள் வேளாளர்கள். அத்தகைய சிறப்பால் உழவுத்தொழிலைப் பேணிவளர்த்து, உயிர்கட்கு ஊட்டி வரும் சிறப்புடையர்.

ஓங்கியநாற் குலத்தொவ்வாப் புணர்வில் தம்மில்
உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாங்குழுமிப் பிறந்தகுல பேத மெல்லாம்
தந்தகைமைக் கேற்றதனி யிடங்கள் மேவி
ஆங்குநிறை கிளைபயின்று மரபி னாற்ற
அடுத்தவினைத் தொழில்முறைமை வழாமை நீடு
பாங்குவளர் இருக்கைநிலை பலவும் எல்லாம்
பண்புநீ டியவுரிமைப் பால அன்றே.

[ 103]


உயர்வான இந்நான்கு மரபிலும், தத்தம் குலத்திற்கு ஒவ்வாத கூட்டுறவால் தோன்றிய ஆணும் பெண்ணும், உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதிகளாகி, தத்தம் தகைமைக் கேற்ற தனியான இடங்களில் பொருந்தி, அங்குத் தம் சுற்றத்தாருடன் சேர்ந்து, தத்தமக்கு ஏற்ற தொழில்களைச் செய்து, குணம் பெருக வாழ்ந்து வரும் உரிமையுடையவர்களாய் விளங்கினர்.

குறிப்புரை: 'இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்' (குறள், 133) என்பர் திருவள்ளுவர். இவ்வகையால் இம்மக்கள் உயர்வும் தாழ்வும் பெறலாயினர்.

ஆதி மூதெயில் அந்நகர் மன்னிய
சோதி நீள்மணித் தூபமுந் தீபமும்
கோதில் பல்லிய முங்கொடி யும்பயில்
வீதி நாளும் ஒழியா விழாவணி.

[ 104]


தோற்றமில் காலத்தவரான இறைவரின் முதிய மதில் சூழ்ந்த அக்காஞ்சி எனும் நகரில் விளங்கும் வீதிகள், நீண்ட ஒளியையுடைய மணித்தூபமும், விளக்கும், குறைவிலாத இசைக் கருவிகளும், கொடியும் நிறைந்து, நாளும் விழாக் கோலம் பூண்டு நிற்பன.

குறிப்புரை: நறுமணம் புகைத்தற்குரிய தூபங்களும், ஒளி விளக்கு களும் மணிகளால் செய்யப்பட்டிருத்தலின், 'சோதிநீள் மணித் தூபமும் தீபமும்' என்றார்.

வாயில் எங்கணுந் தோரணம் மாமதில்
ஞாயில் எங்கணுஞ் சூழ்முகில் நாள்மதி
தோயில் எங்கணும் மங்கலம் தொண்டர்சூழ்
கோயில் எங்கணும் உம்பர் குலக்குழாம்.

[ 105]


அந்நகர மாளிகையின் வாயில்கள் எங்கும் தோரணங்கள் சிறப்புற உள்ளன. பெருமதிலின் உறுப்புகள் எங்கணும் மேகங்கள் சூழ்வன. இளம் பிறை தோயும் மாடங்கள் எங்கும் மங்கலம் நிரம்பிய நற்செயல்கள் நிகழ்வன. தொண்டர்கள் சூழ்ந்து வலம் வரும் கோயில்கள் எங்கும், தேவர்களின் கூட்டங்கள் வந்து சேர்வன.

குறிப்புரை:

Go to top
வேத வேதியர் வேள்வியே தீயன
மாத ரோதி மலரே பிணியன
காதல் வீதிவி லக்கே கவலைய
சூத மாதவி யேபுறஞ் சூழ்வன.

[ 106]


மறையவர்கள் இயற்றும் வேள்விகளே தீயினைக் கொண்டிருப்பன. மகளிர் தம் கூந்தல்களில் உள்ள மலர்களே பிணிப் புடையன. விருப்பமிகும் வீதிகளில் குறுக்கிடும் சிறுசிறுவீதிகளே கவலையுடையன. மாமரங்களும், குருக்கத்தி மலர்களுமே புறஞ் சூழ்வன.

குறிப்புரை: தீயன என்னும் தொடர், தீமை உடையன, நெருப்பை யுடையன என இருபொருள்பட நின்றது. இவற்றுள் வேள்வித் தீயே (தீயன) நெருப்புடையன என்பதால் பிற தீமைகள் எவையும் இல்லை என்பது பெறப்படுகிறது. பிணியன என்பது கட்டப்படுவன, பிறரால் கட்டுப்படுத்தப்படுவன என இருபொருள்பட நின்றது. பெண்களின் கூந்தலில் உள்ள மலர்களே (பிணியன) கட்டப்பட்டன என்பதால் பிறர் எவராலும் அந்நாட்டு மக்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்பது விளங்குகின்றது. எனவே 'நாமார்க்கும் குடியல்லோம்'(தி. 6 ப. 98 பா. 1) எனும் உணர்வோடு வாழ்கின்றார்கள் என்பது கருத்தாகின்றது. கவலைய என்பது கவலைக்கு உரியன, கவர்த்த வழிகளையுடையன என இருபொருள் பட நின்றது. இங்கு வீதிகளில் ஆங்காங்கு குறுக் கிடும் சிறுசிறு வீதிகளே வழிச்செல்வார்க்கு கவர்த்தலைத் தருவன என்பதால் இந்நகரில் உள்ளார் எவரும் மனக்கவலையின்றி வாழ்கின் றனர் என்பது தெரிகின்றது. புறஞ்சூழ்வன என்பது நகரின் புறத்தே இருப்பன, புறங்கூறுதலுடையன என இரு பொருள்பட நின்றது. இங்கு மாதவியும், குருக்கத்தியுமே நகர்ப்புறத்து (புறம்சூழ்வன) இருப்பன என்பதால், இந் நகரில் புறங்கூறுவார் எவரும் இலர் என்பது புலனாகின்றது.

சாய லார்கள் நுசுப்பே தளர்வன
ஆய மாடக் கொடியே அசைவன
சேய ஓடைக் களிறே திகைப்பன
பாய சோலைத் தருவே பயத்தன.

[ 107]


மயிலின் சாயலையுடைய பெண்களின் இடை களே தளர்ச்சியுடையன. அப்பெண்கள் மாடங்களில் நாட்டிய கொடிகளே அசைவன. சிவந்த நெற்றிப் பட்டங்களையுடைய யானை களே மயங்குவன. பரவியிருக்கும் நல்ல சோலைகளில் உள்ள மரங் களே பயனுடையன.

குறிப்புரை: தளர்தல் என்பது இளைத்தல், வருந்துதல் என இரு பொருள்பட நின்றது. இங்கு மகளிரின் இடைகளே இளைத்திருப்பன. (தளர்வன) என்பதால், இவையன்றி அந்நாட்டில் உள்ளார் எவரும் வேறுபிற காரணங்களால் இளைத்தலிலர் என்பது பெறப்படுகின்றது. அசைவன என்பது அசைதல், வருந்துதல் என இரு பொருள்பட நின்றது. இங்கு மாடத்திலுள்ள கொடிகளே அசைகின்றன என்பதால் அந்நகரிலுள்ளார் எவருக்கும் வேறு பிற வருத்தமே இல்லை என்பது பெறப்படுகின்றது. அசைதல் பண்டை நிலைமை கெட்டு வேறொரு வாறாகி வருந்துதல் (தொல். பொருள். மெய்ப். 5) எனப் பேராசிரியர் உரைத்தமையும் காண்க. திகைப்பன என்பது அவ்வத் திசைகள், மயங்குதல் என இரு பொருள் பட நின்றது. இங்கு யானைகளே அவ்வத் திசைகளிலும் (திகைப்பன) இருப்பன என்பதால், அந்நகரிலுள்ளார்க்கு வேறு பிற மயக்க நிலை இல்லை என்பது பெறப்படுகின்றது. பயத்தன என்பது பயனை உடையது, பயத்தை உடையது என் இரு பொருள்பட நின்றது. இங்கு மரங்களே பயன் தருவனவாய் (பயத்தன) உள்ளன என்பதால் இந்நகரிலுள்ளார் எவர்க்கும் அச்சப்படுத்தற்குரிய எதுவும் இன்று என்பது பெறப் படுகின்றது. பயன் - காய்கனி முதலாயின. 'பயன்மரம்' (குறள், 216) என்றும், 'மருந்தாகித் தப்பா மரத்தற்றால்' (குறள், 217) என்றும் திருவள்ளுவர் கூறுவனவும் இங்கு நினைவு கொளற்குரியன.

அண்ண லார்அன்பர் அன்பேமுன் ஆர்த்தன
தண்ண றுஞ்செழுந் தாதே துகளன
வண்ண நீள்மணி மாலையே தாழ்வன
எண்ணில் குங்குமச் சேறே இழுக்கின.

[ 108]


சிவபெருமானிடத்து அன்பு பூண்டொழுகும் அன்பர்களின் அன்பே முதன்மையாக ஆர்ப்பன. குளிர்ந்த நறிய செழுமை மிக்க மகரந்தப் பொடிகளே துகளாவன. அழகிய நீண்ட மணி மாலைகளே தாழ்வன; அளவற்ற குங்குமக் குழம்பின் சேறே வழுக்கு தலையுடைய.
குறிப்புரை: ஆர்த்தல் என்பது ஒலித்தல், கட்டப்படுதல் என இரு பொருள்பட நின்றது. இங்குப் பெருமானின் அன்பர்களிடத்திலேயே ஒலி எழுந்தன என்பதால், அங்குள்ள உயிர்கள் எவையும் வினை யால் கட்டப்படுவனவல்ல என்பது பெறப்படுகின்றது. அன்பர்கள் ஆர்த்தல் என்பது அன்புமீதூர்வினால் பெருமானை நோக்கி ஆடுத லும், பாடுதலுமாய் நிற்பதேயாம். ஆர்த்தல் கட்டப்படுதல், 'ஆர்த்த பிறவித் துயர்கெட'(தி. 8 ப. 7 பா. 12) எனவரும் திருவாக்கும் காண்க. துகள் என்பது பொடி, புழுதி என இருபொருள்பட நின்றது. இங்குப் பூந்தாதுக்களே பொடியாக உதிர்ந்து கிடக்கின்றன என்பதால் வேறு பிறவற்றால் வரும் புழுதிகள் இல்லை என்பது பெறப்படுகின்றது. தாழ்வன என்பது தொங்குதல், கீழ்நிலைப் படுதல் என இருபொருள் பட நின்றது. இங்கு மணிகளால் ஆய மாலைகளே தொங்குகின்றன என்பதால், ஏனைய உயிரினங்கள் தம்நிலையில் தாழ்ந்து நிற்க வில்லை என்பது பெறப்படுகின்றது. இழுக்குதல் என்பது வழுக்குதல், குற்றமுடையதாதல் என இருபொருள்பட நின்றது. இங்குத் தெருவில் உள்ள குங்குமச் சேறே வழுக்குகின்றன என்பதால், வேறு இழுக் குடைய (குற்றமுடைய) பொருள்கள் எவையும் இல்லை என்பது பெறப்படுகின்றது.

வென்றி வானவர் தாம்விளை யாடலும்
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்
ஒன்றும் அங்கொழி யாவகை உய்ப்பது.

[ 109]


வெற்றி பொருந்திய தேவர்களைப் போல விளை யாட்டயர்தலையும், உடல் அழிவின்றி (காயசித்தி) என்றுமுள்ளவர் களாயிருக்கும் சித்தர்களைப்போல வாழும் இயல்பினையும், நன்மைகள் பலவும் பெற விரும்பும் திருவுள்ளமுடையவர்கள் தாம் வேண்டியவாறு பெற வழங்கும் வள்ளன்மையும் உடையது அக் காஞ்சி மாநகரம் ஆகும்.
குறிப்புரை:

புரங்க டந்தவர் காஞ்சி புரம்புகழ்
பரம்பு நீள்புவ னம்பதி னான்கினும்
வரம்பில் போக வனப்பின் வளமெலாம்
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால்.

[ 110]


முப்புரங்களையும் வென்றவராய சிவபரஞ்சுடர் வீற்றிருக்கும் காஞ்சிபுரம், புகழ் விளங்கும் பதினான்கு உலகங்களி லும் காணப்படும் அளவுகடந்த போகங்களுக்குரிய வனப்புமிகுந்த வளங்கள் யாவற்றையும் கொண்டிருக்கும் ஒரு கொள்கலமாக விளங்குவதாகும்.
குறிப்புரை:

Go to top
அவ்வகைய திருநகரம்
அதன்கண்ஒரு மருங்குறைவார்
இவ்வுலகில் பிறப்பினால்
ஏகாலிக் குலத்துள்ளார்
செவ்வியஅன் புடைமனத்தார்
சீலத்தின் நெறிநின்றார்
மைவிரவு கண்டரடி
வழித்தொண்டர் உளரானார்.

[ 111]


அவ்வகையான திருவுடைய காஞ்சி நகரின் ஒரு புறமாக வாழ்பவர், இவ்வுலகத்தில் பிறப்பினால் ஏகாலியர் குலத்தில் தோன்றியவர், செப்பமாய அன்புடைய மனமுடையவர், சிவ பெருமானை உளங்கொண்ட சீலமுடையவர், கருமை பொருந்திய கழுத்தினையுடைய சிவபெருமானின் திருவடிகளில் வழிவழியாகத் தொண்டு செய்து வரும் வழியடிமைத் தொண்டராக வாழ்பவர் ஒருவர் உளரானார்.

குறிப்புரை: ஏகாலியர்குலம் - வண்ணார் மரபு.

மண்ணின்மிசை வந்ததற்பின்
மனமுதலா யினமூன்றும்
அண்ணலார் சேவடியின்
சார்வாக அணைவிப்பார்
புண்ணியமெய்த் தொண்டர்திருக்
குறிப்பறிந்து போற்றுநிலைத்
திண்மையினால் திருக்குறிப்புத்
தொண்டர்எனுஞ் சிறப்பினார்.

[ 112]


இவர் இந்நிலவுலகில் தோன்றிய பின்னர், மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளையும் சிவபெருமானின் திருவடி களிலேயே அணைவிப்பார். எம்பிராற்கு ஆளாகும் புண்ணியமுடைய மெய்யடியார்களின் திருக்குறிப்பைத் தாமாகவே உணர்ந்து, அவர்க் குத் தொண்டு செய்து போற்றிடும் நிலையாய திண்மையினால், திருக் குறிப்புத்தொண்டர் என்று அழைக்கப்படும் சிறப்பினை உடையவர்.
குறிப்புரை: திருக்குறிப்புத்தொண்டர் என்பது காரணப் பெயராம். இயற்பெயர் தெரிந்திலது.

தேரொலிக்க மாவொலிக்கத்
திசையொலிக்கும் புகழ்க்காஞ்சி
ஊரொலிக்கும் பெருவண்ணார்
எனவொண்ணா உண்மையினார்
நீரொலிக்க அராவிரைக்க
நிலாமுகிழ்க்குந் திருமுடியார்
பேரொலிக்க உருகுமவர்க்
கொலிப்பர்பெரு விருப்பினொடும்.

[ 113]


தேர்கள் ஒலிக்கவும், குதிரைகள் கனைத்து ஒலி செய்யவும், திசைகளில் எல்லாம் சென்று பறக்கின்ற புகழுடையதாய காஞ்சி நகரில் உள்ளார்தம் உடைகளையெல்லாம் அழுக்கு நீக்கித் தந்துதவும் வண்ணார் என அழைக்கப்பெறும் தொழிற் சிறப்புடைய இவர், கங்கை நீர் ததும்பி ஒலித்திடப், பாம்பு இரைந்திட, இளம்பிறை யின் ஒளி ெபாருந்திய திருச்சடையையுடைய பெருமானின் திருப் பெயர் ஒலித்திட, உருகுகின்ற அடியார்களுக்கு அவர்களின் உடை களை அழுக்கு நீங்க ஒலித்துக் கொடுக்கும் விருப்பினொடும்.
குறிப்புரை:

. தேசுடைய மலர்க்கமலச்
சேவடியார் அடியார்தம்
தூசுடைய துகள்மாசு
கழிப்பார்போல் தொல்லைவினை
ஆசுடைய மலம்மூன்றும்
அணையவரும் பெரும்பிறவி
மாசுதனை விடக்கழித்து
வருநாளில் அங்கொருநாள்.

[ 114]


ஒளி பொருந்திய தாமரை மலர் போலும் சேவடி களையுடைய சிவனடியார்களின் அழுக்குடைய ஆடைகளின் மாசி னைத் தாம் நீக்குவார் போன்றே, பழையதாகிய பழவினை பற்றிவரும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் பொருந்துவதால் வருகின்ற பெரும் பிறவியாய கட்டினைத் தமது தொண்டால் நெகிழக் கழித்து வருகின்ற நாள்களில், ஒருநாள்.
குறிப்புரை: தொல்லைவினை - மூலகன்மம். இது மும்மலவினை யால் வருவது, பிறவிக்கு ஏதுவாயது. தூசு - ஆடை. துகள் மாசு கழிப் பார் என்னாது கழிப்பார் போல் என்றது அவர் கழித்து வந்தது புறப் பார்வைக்கு ஆடையின் மாசாகத்தோன்றினும், அகப்பார்வையில் பிறவிமாசேயாம் என்பது தோன்ற நின்றது.

பொன்னிமயப் பொருப்பரையன்
பயந்தருளும் பூங்கொடிதன்
நன்னிலைமை அன்றளக்க
எழுந்தருளும் நம்பெருமான்
தன்னுடைய அடியவர்தம்
தனித்தொண்டர் தம்முடைய
அந்நிலைமை கண்டன்பர்க்
கருள்புரிவான் வந்தணைவார்.

[ 115]


பொன் போல் விளங்கிடும் இமயமலை அரசரின் திருமகளாராய பூங்கொடி போன்ற உமையம்மையாரது தவநிலையை உலகவர் அறிய எழுந்தருளிவந்த பெருமான், தன்னுடைய அடியவர் களின் தனித்தொண்டரான திருக்குறிப்புத்தொண்டரின் அன்புமிகுந்த நிலையினைக் கண்டு, அவ்வன்பருக்கு அருள் புரிந்திட வேண்டி வந் தணைந்தார்.
குறிப்புரை:

Go to top
சீதமலி காலத்துத்
திருக்குறிப்புத் தொண்டர்பால்
ஆதுலராய் மெலிந்துமிக
அழுக்கடைந்த கந்தையுடன்
மாதவவே டந்தாங்கி
மாலறியா மலரடிகள்
கோதடையா மனத்தவர்முன்
குறுநடைகள் கொளக்குறுகி.

[ 116]


குளிர் மலிந்த மாரிக்காலத்தில், திருக்குறிப்புத் தொண்டரிடத்து, யாவரும் பேணுதல் இன்றித் தனித்து வாழ்வோர் போன்று மெலிந்து, மிகவும் அழுக்கடைந்த கந்தையுடன் பெருந்தவ வேடத்தைத் தாங்கி, திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத திருவுடைய மலரடிகள், குற்றம் அடையாத மனமுடைய அன்பராம் திருக்குறிப்புத்தொண்டர் முன்பாக மெதுவாக நடந்தருளி வந்து அணைய.
குறிப்புரை:

திருமேனி வெண்ணீறு
திகழ்ந்தொளிருங் கோலத்துக்
கருமேக மெனஅழுக்குக்
கந்தையுடன் எழுந்தருளி
வருமேனி அருந்தவரைக்
கண்டுமனம் மகிழ்ந்தெதிர்கொண்
டுருமேவும் மயிர்ப்புளகம்
உளவாகப் பணிந்தெழுந்தார்.

[ 117]


திருமேனியில் வெண்ணீறு திகழ்ந்து ஒளிர, கரிய மேகம் போன்று அழுக்கேறிக் கறுத்த ஆடையுடன் எழுந்தருளி வரு கின்ற திருமேனியையுடைய அரிய தவத்தினரைக் கண்டு, திருக் குறிப்புத்தொண்டர் மனம் மகிழ்ந்து எதிர் கொண்டு, தன்வயமிழந்து மயிர் சிலிர்க்க, உடன் அவரைப் பணிந்து எழுந்தார்.
குறிப்புரை: இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

எய்துமவர் குறிப்பறிந்தே
இன்மொழிகள் பலமொழிந்து
செய்தவத்தீர் திருமேனி
இளைத்திருந்த தென்னென்று
கைதொழுது கந்தையினைத்
தந்தருளும் கழுவஎன
மைதிகழ்கண் டங்கரந்த
மாதவத்தோர் அருள்செய்வார்.

[ 118]


தம் முன்பு வந்தருளும் அவ்வடியாரின் குறிப் பினைத் திருக்குறிப்புத்தொண்டர் அறிந்து, அவரை நோக்கி, இனியன வாகப் பலமுகமன் மொழிந்து, செப்பமுடன் நற்றவத்தினைப் புரிந் தருளும் தவச்சீலரே! உம் திருமேனி வாட்ட முற்றிருப்பதேனோ? என்று கூறிக் கைதொழுது, 'உமது கந்தையாய ஆடையைத் தந்தரு ளுக! நான் அதைத் தோய்த்து அழுக்கு நீக்கித் தருவேன்' என்று கேட் டருளலும், அது பொழுது கருமை திகழும் கழுத்தை மறைத்து வந்த அத்தவமுனிவரும், திருக்குறிப்புத்தொண்டரை நோக்கி, இவ்வாறு அருள் செய்வாராய்.
குறிப்புரை:

இக்கந்தை அழுக்கேறி
எடுக்கவொணா தெனினும்யான்
மெய்க்கொண்ட குளிர்க்குடைந்து
விடமாட்டேன் மேல்கடற்பால்
அக்குன்றம் வெங்கதிரோன்
அணைவதன்முன் தருவீரேல்
கைக்கொண்டு போய்ஒலித்துக்
கொடுவாருங் கடிதென்றார்.

[ 119]


'இக்கந்தை மிகவும் அழுக்கேறி, அதனை நான் எடுத்து அணிவதற்கு உதவாது என்றாலும், என்மேனியில் தாக்கிடும் குளிருக்கு அஞ்சி அதைவிட மாட்டாதவனாயுள்ளேன். எனினும் மேற்குக் கடலின் அருகாயுள்ள மலையில் கதிரவன் சேர்தற்குமுன், நீர் அதனைத் தோய்த்து தூய்மையாக்கித் தரமுடியும் எனில் இதனைக் கையில் கொண்டு சென்று தோய்த்து விரைவில் உலர்த்திக் கொண்டு வாரும்' என்றார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

தந்தருளும் இக்கந்தை
தாழாதே ஒலித்துமக்கின்
றந்திபடு வதன்முன்னம்
தருகின்றேன் எனஅவரும்
கந்தையிது ஒலித்துணக்கிக்
கடிதின்றே தாரீரேல்
இந்தவுடற் கிடர்செய்தீர்
என்றுகொடுத் தேகினார்.

[ 120]


என்று கூறிய அடியவரை நோக்கித் தொண்டனார், எம்பிரானே! இக்கந்தையைச் சிறிதும் காலந் தாழ்த்தலின்றிக் கொண்டு சென்று தோய்த்து உமக்கு இன்று மாலைக்காலம் வருமுன்பு தருகின்றேன் என்று கூறலும், அவ்வடியவரும் அவரை நோக்கி, 'இக்கந்தையை நீர் தோய்த்து உலரவைத்து, இன்றே தாரீராகில், இவ்வுடம்பிற்கு நீர் தீங்கிழைத்தீர் ஆவீர்' என்று கூறிக் கந்தையைக் கொடுத்துப் போயினார்.
குறிப்புரை:

Go to top
குறித்தபொழு தேயொலித்துக்
கொடுப்பதற்குக் கொடுபோந்து
வெறித்தடநீர்த் துறையின்கண்
மாசெறிந்து மிகப்புழுக்கிப்
பிறித்தொலிக்கப் புகுமளவில்
பெரும்பகல்போய்ப் பின்பகலாய்
மறிக்கரத்தார் திருவருளால்
மழையெழுந்து பொழிந்திடுமால்.

[ 121]


அடியவருக்குத் தாம் கூறியவாறு குறித்த அக் காலத்தில் கொடுப்பதற்காக, நறுமணமுடய மலர்கள் நிறைந்த குளத்தின் கண்ணுள்ள நீர்த்துறைக்குச் சென்று, அக்கந்தையைத் தோய்த்து அழுக்கினை நீக்குதற்காகப் பின்னர் உவர்மண் சேர்த்து மிகவும் புழுங்கும்படி வெள்ளாவியில் வைத்து வேறாக எடுத்து அதனைத் தோய்த்திடத் தொடங்கிய அளவில், நண்பகல் கழிந்து, பிற்பகலாய மாலைவேளை அணுகும் காலமுமாயிட, அக்காலத்தே மான் ஏந்திய கையையுடைய இறைவனின் திருவருளால் மழை பொழிந்திடலாயிற்று.
குறிப்புரை:

திசைமயங்க வெளியடைத்த
செறிமுகிலின் குழாமிடைந்து
மிசைசொரியும் புனல்தாரை
விழிநுழையா வகைமிடைய
அசைவுடைய மனத்தன்பர்
அறிவுமறந் தருந்தவர்பால்
இசைவுநினைந் தழிந்தினியான்
என்செய்கேன் எனநின்றார்.


[ 122]


திசைகள் தெரியாதவாறு வெளியினை அடைத் துப் பரந்து எங்கும் செறிந்த மேகங்களின் கூட்டம் நெருங்கி எழுந்து, மேல் பொழியும் மழைத்தாரைகள் கண்பார்வை நுழைய முடியாதபடி நெருங்கிப் பெய்திட, அது கண்டு இரக்கம் உடைய மனத்து அன்பராய திருக்குறிப்புத்தொண்டர் ஏங்கி, அறிவும் மறந்து, அரிய தவத்தினர் பால் தான் சொன்ன உறுதியை நினைந்து, மனம் அழிந்து, அந்தோ! இனியான் என்செய்கேன் எனச் செயலற்று நின்றார்.
குறிப்புரை:

ஓவாதே பொழியுமழை
ஒருகால்விட் டொழியுமெனக்
காவாலி திருத்தொண்டர்
தனிநின்றார் விடக்காணார்
மேவார்போல் கங்குல்வர
மெய்குளிரும் விழுத்தவர்பால்
ஆஆ என் குற்றேவல்
அழிந்தவா எனவிழுந்தார்.

[ 123]


ஓயாது பொழிகின்ற மழை, ஒருகால் பெய்தலை விட்டு ஓயும் என்று, கையில் கபாலத்தையுடைய சிவபெருமானின், திருத்தொண்டர் தனித்து நின்றார். மழைவிடக் காணார். இந்நேரம் மாலையும் நீங்கிப் பகைவர் போல இரவும் வந்திட, அது கண்டு இக்குளிர்க்கு அவர் மேனி தளர்வுறும் நிலையை நினைந்து, அந்தோ! நான் இன்று செய்யும் குற்றேவல் அழிந்து விட்டதே எனக் கலங்கித் துயர் மிகுதியால் மயங்கி வீழ்ந்தார்.
குறிப்புரை:

விழுந்தமழை ஒழியாது
மெய்த்தவர்சொல் லியஎல்லை
கழிந்ததுமுன் பொலித்துமனைக்
காற்றேற்க அறிந்திலேன்
செழுந்தவர்தந் திருமேனி
குளிர்காணுந் தீங்கிழைத்த
தொழும்பனேற் கினியிதுவே
செயலென்று துணிந்தெழுவார்.

[ 124]


அந்தோ! பெய்யும் இம்மழை இனி ஒழியாது. மெய்ம்மைத் தவமுடைய அப்பெரியவர் சொன்ன எல்லையும் கழிந்து விட்டது. இக்கந்தையை முன்னமேயே தோய்த்து என் மனையில் காற்றில் உலவும்படி செய்யாது ஒழிந்தேன். செழுமை மிக்க அத்தவப் பெரியார் திருமேனி குளிரால் தாக்கப்பட்டுத் துன்புறுமாறு தீங்கினைச் செய்த தொண்டனாகிய எனக்கு, அடுத்த செயல் இனி இதுதான், என்று அதைச் செய்திடத் துணிவு கொண்டு எழுந்தார் திருக்குறிப்புத்தொண் டனார்.
குறிப்புரை:

கந்தைபுடைத் திடஎற்றுங்
கற்பாறை மிசைத்தலையைச்
சிந்தவெடுத் தெற்றுவன்என்
றணைந்துசெழும் பாறைமிசைத்
தந்தலையைப் புடைத்தெற்ற
அப்பாறை தன்மருங்கு
வந்தெழுந்து பிடித்ததணி
வளைத்தழும்பர் மலர்ச்செங்கை.

[ 125]


கந்தையை ஒலித்தற்காக இருக்கும் கற்பாறையில் தீங்கிழைத்த என் தலை சிதறுண்ண எற்றுவன் என்று கற்பாறையிடத்துச் சென்று அச்செழுமை மிகுந்த கந்தை தோய்த்திடும் பாறையில், தம் தலையை முட்டிய நிலையில், அப்பாறையின் அருகில் வந்து, அழகிய வளையல்களின் தழும்பைக் கொண்டவராகிய சிவபெருமானின் மலர் போலும் சிவந்த கைகள் வந்து எழுந்து, அத்தலையைப் பிடித்துக் கொண்டன.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
வானிறைந்த புனல்மழைபோய்
மலர்மழையாய் இடமருங்கு
தேனிறைந்த மலரிதழித்
திருமுடியார் பொருவிடையின்
மேனிறைந்த துணைவியொடும்
வெளிநின்றார் மெய்த்தொண்டர்
தானிறைந்த அன்புருகக்
கைதொழுது தனிநின்றார்.

[ 126]


வானில் நிறைந்த நீராய மழை போய், மலராய மழை பொழிந்திடத், திருக்குறிப்புத் தொண்டரின் அருகில், தேன் நிறைந்த மலர்க் கொன்றையை அணிந்த திருமுடியையுடைய பெரு மான், ஆனேற்றின்மீது அருள் நிறைந்த உமையம்மையாருடன் வெளிப்பட்டு முன் நின்றார். மெய்ம்மை தவறாத திருக்குறிப்புத் தொண்டர், தாமும் கண்ணால் கண்டு, உள்ளம் நிறைந்த அன்பு உருக்கிட அம்மையப்பரைக் கைதொழுது கொண்டு தனியே நின்றார்.
குறிப்புரை:

முன்னவரை நேர்நோக்கி
முக்கண்ணர் மூவுலகும்
நின்னிலைமை அறிவித்தோம்
நீயும்இனி நீடியநம்
மன்னுலகு பிரியாது
வைகுவாய் எனஅருளி
அந்நிலையே எழுந்தருளி
அணிஏகாம் பரம்அணைந்தார்.

[ 127]


தம்முன்பு நின்ற அடியவரை முக்கண்களை யுடைய இறைவன், 'மூவுலகும் உனது அன்பின் நிலையை அறியுமாறு அறிவித்தோம், நீயும் இனி நீடிய வாழ்வுடைய நம் பேருலகை வந்த டைந்து எம்முடன் பிரியாது இருந்திடுவாய் என அருள் புரிந்து, அந் நிலையே தாம் எழுந்து மறைந்தருளி, அழகுடைய ஏகாம்பரம் என்னும் திருக்கோவிலைச் சென்று சேர்ந்தார்.
குறிப்புரை:

சீர்நிலவு திருக்குறிப்புத்
தொண்டர்திருத் தொழில்போற்றிப்
பார்குலவத் தந்தைதாள்
அறஎறிந்தார் பரிசுரைக்கேன்
பேரருளின் மெய்த்தொண்டர்
பித்தனெனப் பிதற்றுதலால்
ஆருலகில் இதனுண்மை
அறிந்துரைக்க இசைந்தெழுவார்.

[ 128]


சிறப்புமிக்க திருக்குறிப்புத் தொண்டனார் செய் தருளிய திருத்தொண்டினை அடியேன் வணங்கி, உலகம் உய்யத் தந்தையாரின் கால்கள் அறுமாறு வாளால் வெட்டிய சண்டேசுவர நாயனாரின் திறத்தைச் சொல்கின்றேன். பேரருளின் திறங்கொண்ட மெய்யடியார்கள் எம் பெருமானைப் பித்தன் என்றே தாமும் பிதற்று கின்றமையால், அப்பெருமானின் உண்மைத் தன்மையை முற்றும் அறிந்து சொல்ல இசைந்து எழுவார் யாவர்? ஒருவரும் இலர் என்பதாம்.
குறிப்புரை: பித்தர் என்றவர் ஆளுடைய நம்பியார் ஆவர். அவருக்கு முன்னரும் அப்பெயரால் அழைத்தவர்கள் ஞான சம்பந்தரும் நாவரசரும் ஆவர். 'பித்தா பிறைசூடீ' (தி. 1 ப. 89 பா. 3) (ஞானசம்பந்தர் - திருஎருக்கத்தம்புலியூர்) 'பித்தன் தன்னை' (தி. 6 ப. 74 பா. 6) (அப்பர் - திருநாரையூர்த் திருத்தாண்டகம்) என வருவன காண்க. 'ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு பித்தர் காணும் பெருமா னடிகளே'(தி. 5 ப. 38 பா. 5) எனவரும் அப்பர் அடிகளின் திருவாக்கும் காண்க.


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song